தொடர் மழையால் ராமநாதபுரம் முண்டு மிளகாய் கடும் பாதிப்பு: பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி வட்டார விவசாயிகள் கவலை

நயினார்கோவில் ஒன்றியம் அ.பனையூர் கிராமத்தில் தொடர் மழையால் அழுகி நிற்கும் மிளகாய்ச்செடிகள்.
நயினார்கோவில் ஒன்றியம் அ.பனையூர் கிராமத்தில் தொடர் மழையால் அழுகி நிற்கும் மிளகாய்ச்செடிகள்.
Updated on
1 min read

தமிழகத்திலேயே சிறப்புப் பெற்ற ‘ராமநாதபுரம் முண்டு மிளகாய்’ தொடர் மழையால் இந்தாண்டு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஊர்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் சேதமடைந்தும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பெருமளவில் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் இந்தாண்டு 3.34 லட்சம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டது. இதில் முதற்கட்ட ஆய்வில் 1 லட்சம் ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.

அடுத்ததாக மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ள குண்டு மிளகாய் எனச் சொல்லப்படும் ‘ராமநாதபுரம் முண்டு மிளகாய்’. தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும்தான் இந்த மிளகாய் பயிரிடப்படுகிறது. இந்தாண்டு மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர் முண்டு மிளகாய் பயிரிடப்பட்டது. மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களிலேயே அதிகளவில் முண்டு மிளகாய் பயிரிடப்படுகிறது.

இந்தாண்டு பருவமழையும் நன்கு பெய்து, மிளகாய்ச் செடிகளும் நன்கு வளர்ந்து காய்க்கத் தொடங்கின. இந்த நேரத்தில் டிசம்பர் மாத இறுதியிலும், ஜனவரி மாதத் தொடக்கத்திலும் அதிக மழை பெய்தது. மிளகாய்ச் செடி வயல்களில் அதிக தண்ணீர் தேங்கினால் செடிகள் வாடி அழுகி விடும். தொடர் மழையால் மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. விவசாயிகளும் தண்ணீரை வடிக்க முயற்சி எடுத்தாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் செய்வதறியாது திகைக்கின்றனர்.

அதனால் எப்படியும் இந்தாண்டு பயிரிடப்பட்ட 1.25 லட்சம் ஏக்கரில் 75 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் மிளகாய் பயிர்கள் சேதமடையும் என விவசாயிகள் கூறுகின்றனர். நயினார்கோவில் ஒன்றியம் அ.பனை யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்தானபாண்டியன் கூறும்போது, இந்தாண்டு தொடர் மழையால் மிளகாய் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மிளகாய் விவ சாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in