Published : 17 Jan 2021 02:51 PM
Last Updated : 17 Jan 2021 02:51 PM

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நாட்டார் கால்வாய் ஒருமுறையாவது வைகை நீர் வருமா? - ஏக்கத்தில் 16 கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நாட்டார் கால்வாயில் ஒருமுறையாவது வைகை தண்ணீர் வருமா என 16 கிராம மக்கள் ஏக்கத்தில் உள்ளனர்.

மானாமதுரை அருகே ஆர்.புதூர், அன்னவாசல், கிளங்காட்டூர், கரிசல் குளம், அரிமண்டபம் உள்ளிட்ட 16 கிராமங்கள் மழைமறைவுப் பகுதிகளாக உள்ளன. அப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு கிருங்காக்கோட்டை அருகே வைகை ஆற்றில் இருந்து நாட்டார் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் மூலம் 16 பெரிய கண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 25-க்கும் மேற்பட்ட குளங்கள் பயன்பெறுகின்றன. மொத்தம் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகளே சொந்தமாக ரூ. 3 லட்சத்தில் கால்வாயைத் தூர் வாரினர். அதன்பிறகு கால்வாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள், புதர்கள் மண்டியதால், சில மாதங்களுக்கு முன்பு, மீண்டும் ரூ.3 கோடியில் கால்வாய் தூர்வாரப்பட்டது. இதனை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். ஆனால், இதுவரை இக்கால்வாயில் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்ததில்லை. மேலும் 2019-ல் மானாமதுரையில் நடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் பழனிசாமி நாட்டார் கால் வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால், அப்பகுதியில் ஒரு சில கண்மாய்களே நிரம்பி உள்ளன. நச்சோடை உள்ளிட்ட கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. வைகை அணை நிரம்பி வரும்நிலையில், இந்த முறையாவது நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், நாட்டார் கால்வாய் பாசன சங்கத் தலைவர் துபாய் காந்தி கூறியதாவது: 16 கிராமங்களில் பெரும் பாலான இடங்களில் நிலத்தடி நீர் உவர்ப்புடன் உள்ளது. அதனால் முழுமையாக கண்மாய் நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர். எங்கள் பகுதி மழை மறைவுப் பகுதி என்பதால் கண்மாய் தண்ணீர் வரத்து இருக்காது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து எங்களது கோரிக்கையை ஏற்று நாட்டார் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கால்வாயில் வைகை தண்ணீர் வந்ததில்லை. இதனால் 20 ஆண்டுகளில் பலர் விவசாயத்தைக் கைவிட்டு வெளி யூர்களுக்கு சென்றுவிட்டனர். வைகை தண்ணீர் வந்தால் மீண்டும் விவசாயம் தழைக்கும். தற்போது வைகை அணை நிரம்பி வருவதால் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அப்போதாவது, நாட் டார் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x