Published : 17 Jan 2021 03:03 PM
Last Updated : 17 Jan 2021 03:03 PM

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க உதவிடுக: மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, பொதுமக்கள் அனைவரும், சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க உதவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விபத்துகளைத் தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களைப் பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

''பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் "சாலைப் பாதுகாப்பு வாரம்" கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 18.1.2021 முதல் 17.2.2021 வரை ஒரு மாத காலம் ""சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு" என்ற கருப்பொருளை மையப்படுத்திக் கடைப்பிடிக்கப்படும்.

சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனும் சாலை விதிகளைக் கடைப்பிடித்து, விபத்தினைத் தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவில் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது குறித்த உறுதிமொழி எடுத்தல், ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல், சிறப்பு வாகன சோதனைகள் நடத்துதல், தொடர் விபத்து சாலைகளைக் கண்டறிதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதிமுக அரசு, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் குறும்படங்களைத் தயாரித்தல், ஈர்ப்பு இசை தயாரித்து அகில இந்திய வானொலி பண்பலை சேவைகள் மூலமாக ஒலிபரப்புதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்துக் குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், சாலைப் பாதுகாப்புப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல்துறை ஆணையரகத்திற்கும் முதலமைச்சரின் விருது வழங்குதல் போன்ற பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், 'சாலை விபத்தில்லா தமிழ்நாடு' (Road Accident-free Tamil Nadu) என்ற இலக்கை அடைவதற்காக, தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கம் (Tamil Nadu Road Safety Mission) அமைக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த அலங்கார அணிவகுப்பு ஊர்தி, அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் பின் அட்டையில் சாலை பாதுகாப்பு செய்திகள் அச்சிடப்பட்டு மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி, 2016-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு 2020-ம் ஆண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 54.04 சதவீதமாகவும் மற்றும் சாலை விபத்துகள் 38.23 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

மேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2020-ம் ஆண்டில் 2 நபர்களாகக் குறைந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விபத்துகளைத் தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களைப் பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x