

ராமநாதரபுரம் மாவட்டம், சாயல்குடியில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழை நீருடன், கழிவுநீரும் குடியிருப்புகளில் கலந்து தேங்குவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் பொங்கல் தினத்தன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாயல்குடி பேரூராட்சியில் மழைக் காலங்களில் ஆண்டுதோறும் மழை பெய்தால் மழைநீருடன், கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது. இதற்கு காரணமாக சாயல்குடி இருவேலி, சந்தனமர ஓடை, எம்ஜிஆர் ஊருணி, இலந்தைக்குளம் வரத்துக் கால்வாய்கள், சாமியார் ஊருணிக்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆகியவை, அறுபது அடிக்கு மேல் அகலம் இருந்தவை அனைத்தும் தற்போது, தனிநபர் ஆக்கிரமிப்பால் சுருங்கி பத்து அடிக்கு குறைவாகக் குறுகிவிட்டன. மேலும், நகர் பகுதியில் இருந்து நாள்தோறும் வெளியேறும் 5 லட்சம் லிட்டர் கழிவுநீர் செல்லும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி சாயல்குடி மாதாகோவில் தெரு, சீனி ஆபீஸ் தெரு, அண்ணாநகர் தெரு, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மாதவன் நகர் மற்றும் சாயல்குடி பஜார் ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து, வீடுகளுக்குள்ளும், சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், சீர்மரபினர் மாணவியர் விடுதிக்கு முன்பாகவும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. ஆக்கிர மிப்புகளை அகற்றி இதற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து சாயல்குடியைச் சேர்ந்த ஆதித்தமிழர் கட்சியின் க.பாஸ்கரன் கூறியதாவது: ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தால் கூட, பல இடங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதை சரி செய்யக்கோரி, சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நட வடிக்கை எடுக்கவில்லை. சாயல்குடி பேரூராட்சி யில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறினார்.
சாலை மறியல்
இந்நிலையில் வருவாய்த்துறை, பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பொங்கலன்று சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆதித்தமிழர் கட்சி மற்றும் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கரு.இரணியன் தலைமையில் நடைபெற்றது. ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். இப் போராட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது.
தகவல் அறிந்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். மழைநீர் தேங்கிய பகுதியில் உள்ள மக்களை சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.