Published : 17 Jan 2021 02:29 PM
Last Updated : 17 Jan 2021 02:29 PM

மெய் மறக்கச் செய்யும் சிவகங்கை இளம் நாகஸ்வர கலைஞர்

சிவகங்கை இளம் நாகஸ்வர கலைஞர் தனது வாசிப்புத் திறமையால் கேட்போரை மெய்மறக்கச் செய்து வருகிறார். மங்கல இசைக்கருவியான நாகஸ்வரம் இசையை ரசிப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

காலப்போக்கில் நவீன இசைக்கருவிகள் வருகையால் நாகஸ்வரம் வாசிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. பரம்பரையாக நாகஸ்வரம் இசைத்த குடும்பத்தில் கூட கலைஞர்கள் உருவாவது குறைந்துவிட்டது. அதை முறியடிக்கும் விதமாக, இளம் வயதிலேயே தனது நாகஸ்வர வாசிப்புத் திறமையால் அனைவரையும் வசப்படுத்தி உள்ளார் சிவகங்கை அகிலாண்டபுரம் இசைக் குடும்பத்தைச் சேர்ந்த பி. மாருதிகுமார். 32 வயதிலேயே இவர் 100-க்கும் மேற்பட்ட கச்சேகரிகளில் இசைத்துள்ளார்.

இவரது திறமையைப் பாராட்டி 2017-ம் ஆண்டு ‘கலை வளர்மணி' விருதை அரசு வழங்கியது. இவரது தாத்தா காந்தி அண்ணாவி ஒரே சமயத்தில் இரண்டு நாகஸ்வரம் வாசித்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து பி. மாருதிகுமார் கூறியதாவது: எனது தாத்தா காந்தி அண்ணாவி காலத்தில் இருந்தே, எங்களது குடும்பம் நாகஸ்வரம் வாசித்து வருகிறது. எங்கள் பகுதியில் 30 கலைஞர்கள் இருந்தனர். வருமானம் குறைவு போன்ற காரணங்களால், தற்போது 10-க்கும் குறைவான கலைஞர்களே உள்ளோம்.

எனது தாத்தா தென்மாவட்டங்களில் நையாண்டி மேளம் என்ற குழுவை ஏற்படுத்தி, இசைக் கலையை வளர்த்தார். அவருடன் வாசித்தவர்களில் தற்போது செங்கோட்டை என்பவர் மட்டுமே உயிருடன் இருக்கிறார். தள்ளாத வயதிலும், அவர் கச்சேரிகளில் வாசித்து வருகிறார். நானும் சிறுவயதில் இருந்தே நாகஸ்வரம் கற்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் வருமானம் குறைவு எனக் கூறி தாத்தாவும், தந்தையும் கற்றுத்தர மறுத்துவிட்டனர்.

இருந்தபோதிலும் எனது தாத்தாவின் புகழை அறிந்து, நாகஸ்வரம் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஒன்பதாம் வகுப்பில் கற்கத் தொடங்கினேன். சிவகங்கை மாவட்ட இசைப் பள்ளியில் 3 ஆண்டுகள், மதுரை பசுமலை இசைக் கல்லூரி யில் 3 ஆண்டுகள் பயின்றேன். இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வருகிறேன். எனது தாத்தாவைப் போல், இரண்டு நாகஸ்வரம் வைத்து இசைக்க முயற்சித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x