

காரைக்குடி அருகே நோய், பூச்சித் தாக்குதலால் டீலக்ஸ் பொன்னி நெற்கதிர்கள் பதராக மாறியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். காரைக்குடி அருகே சாக்கோட்டை வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. டீலக்ஸ் பொன்னி நெல் ரகத்துக்கு நல்ல விலை கிடைப்பதால், அதை தென்கரை, அரியக்குடி, குடிகாத்தான்பட்டி, புதுவயல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது குலநோய், நாவாய் பூச்சித் தாக்குதலால் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கதிர்கள் பதராக மாறியுள்ளதால், விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல கல்லல், தேவகோட்டை, கண்ணங்குடி வட்டாரத்திலும் நோய், பூச்சித் தாக்குத லால் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்கரை விவசாயிகள் கூறியதாவது:
டீலக்ஸ் பொன்னி நெல் விதை வேளாண்மை அலுவலகங்களில் கிடைப்பதில்லை. இதனால் நாங்களே உரக்கடைகளில் வாங்கி விதைத்தோம். சிலரது வயல்களில் நோய்த் தாக்கு தலும், பூச்சித் தாக்குதலும் மாறி, மாறி ஏற்பட்டுள்ளது. இதனால் போலி விதையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது. கதிரில் பால் இல்லாமல் பதராக இருப்பதால், இழப்பு ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கிய வைக்கோலைக் கூட பயன்படுத்த முடியவில்லை. இதனால் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
சாக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகஜெயந்தி கூறியதாவது:
போலி விதைகளாக இருக்க வாய்ப்பில்லை. டீலக்ஸ் பொன்னி ரகத்துக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவு. இதனால் 4 ஆண்டுகளுக்கு முன்பே, நாங்கள் அந்த ரகத்தை விவசாயிகளுக்கு வழங்குவதை நிறுத்திவிட்டோம். ஆனால் விவசாயிகள் டீலக்ஸ் பொன்னி சாகுபடி செய்வதை விடவில்லை. அதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. சமீபத்தில் பயிரிட்டு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றார்.