Published : 17 Jan 2021 02:26 PM
Last Updated : 17 Jan 2021 02:26 PM

வலுக்கும் காரைக்குடி தனி மாவட்ட கோரிக்கை: அதிமுக, திமுகவுக்கு சிக்கல்

காரைக்குடி

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காரைக்குடியைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருவதால் அதிமுக, திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிபேட்டை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியைப் பிரித்து, தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாரம்பரிய நகரான காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, சில நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றம் ஏற்பாட்டில் நடந்த போராட்டத்தில் அமமுக, இந்திய கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி, தமிழ் பேரரசு கட்சி ஆகிய கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதுதவிர 10-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அதிகளவில் கலந்துகொண்டனர்.

ஆனால் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சிவகங்கையை தனி மாவட்டமாக அறிவித்தபோதே, காரைக்குடியை தலைநகராக அறிவிக்க வேண்டுமென்று போராட்டம் நடந்தது. ஆனால், இக்கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. மேலும் காரைக்குடி மக்களை திருப்திபடுத்தும் விதமாக அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் காரைக்குடி அழகப்பா கல்லூரிகளை பல்கலைக்கழகமாக அறிவித்தார். மேலும் காரைக்குடியில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகமும் ஏற்படுத்தப்பட்டது.

தேர்தல் நெருங்கும்நிலையில் மீண்டும் தனி மாவட்டக் கோரிக்கை வலுத்து வருகிறது. இதை அரசு ஏற்காததால் அதிமுகவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அக்கோரிக்கையை இந்த தேர்தலில் வாக்குறுதியாக அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு திமுக கூட்டணியும் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மக்கள் மன்ற மாநிலத் தலைவர் ராசகுமார் கூறியதாவது: பாரம்பரிய நகரமாகவும், சுற்றுலாதலமாகவும் இருக்கும் காரைக்குடிக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே காரைக்குடி நகராட்சியாக மாறியது. அதை மாநகராட்சியாகவும் மற்றும் தனி மாவட்டம் உருவாக்கி தலைநகராகவும் அறிவிக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம் புணரி ஆகிய வட்டங்களை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்கலாம். ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் பல புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதுகூட காரைக்குடி மக்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எம்பி, எம்எல்ஏ எதிர்க்கட்சியைச் சேர்ந்த வர்களாக இருப்பதால் காரைக்குடியை மாநில அரசு புறக்கணித்து வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x