

உழவர்தின வழிபாடுகளில் ஈடுபட்டு இருந்ததால் விவசாயிகள் பலரும் நேற்று தேனி உழவர்சந்தைக்கு காய்கறிகளை கொண்டுவரவில்லை. இதனால் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது.
தேனி உழவர்சந்தை மீறுசமுத்திர கண்மாய் அருகே அமைந்துள்ளது. 60 கடைகளில் தினசரி காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று உழவர்தினம் என்பதால் பல விவசாயிகள் விற்பனைக்கு வரவில்லை. இதனால் வெறும் 7 கடைகள் மட்டுமே செயல்பட்டன. காய்கறிகள் வராததால் பொதுமக்கள் உழவர்சந்தைக்கு வெளியில் உள்ள கடைகளில் காய்களை வாங்கிச் சென்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகை உணவில் காய்கறிகள் பிரதானமாக இருக்கும் என்பதால் 2 நாட்களாக காய்கறிகள் வரத்தும், விற்பனையும் அதிகம் இருந்தது. தொடர் விடுமுறை என்பதால் நேற்று காய்கறிகள் பறிக்கவில்லை. மேலும் பலரும் இறைச்சி உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பர்.
அதனால் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வரவில்லை என்றனர். உழவர்சந்தைக்கு அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றாலும் விவசாயிகள் வராததால் கடைகள் செயல்படாத நிலை இருந்தது. இதுபோல தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் கமிஷன் காய்கறி சந்தை, வாரச்சந்தை போன்றவற்றிற்கும் விடுமுறை விடப்பட்டதால் தேனியில் பல பகுதிகளிலும் காய்கறி வரத்து மிகக் குறைவாகவே இருந்தது.