Published : 17 Jan 2021 02:05 PM
Last Updated : 17 Jan 2021 02:05 PM

பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ராமக்கால் ஓடை நீர்த்தேக்கம்: சுற்றுவட்டார மக்களின் சுற்றுலாத்தலமாக மாறியது 

திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள ராமக்கால் ஓடை நீர்த்தேக்கம் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதை ஆர்வமுடன் பார்த்து குளித்து மகிழ கிராமப்புற மக்கள் அதிகம் பேர் வருவதால் தற்காலிக சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எ.வெள்ளோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆனைவிழுந்தான், ராமக்கால் ஓடை நீர்த்தேக்கம். சிறுமலையிலிருந்து ஆனைவிழுந்தான் ஓடை மற்றும் ராமக்கால் ஓடையை மறித்து கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்ட பிறகு ஒரே ஒரு முறை மட்டுமே நிரம்பி வழிந்தது.

இதன்பின் பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போதுதான் நிரம்பியுள்ளது. இதன்மூலம் எ.வெள்ளோடு கிராமத்தைச் சுற்றியுள்ள விளைநிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இப்பகுதியில் அதிகம் பயிரிடப்பட்டுவரும் திராட்சை, பூ விவசாயத்திற்கும் இது பயன்படும் வகையில் உள்ளது. மேலும் ஓடையை நம்பியுள்ள கண்மாய், குளங்களுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. எ.வெள்ளோடு பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு கிடந்த கண்மாய், குளங்களுக்கு தற்போது தண்ணீர் சென்றுகொண்டுள்ளது.

நீர்த்தேக்கம் பராமரிப்பு இன்றி முட்செடிகள் வளர்ந்து காணப்பட்டது. இதை சீரமைத்து தூர்வார வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரி்க்கை நிறைவேற்றப்படவில்லை. தூர்வாரியிருந்தால் கூடுதல் நீர் தேக்க ஏதுவாக இருந்திருக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீர் பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி கிராமப்பகுதிகளில் உள்ள குளங்களுக்கு செல்கிறது. இதனால் பத்து ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளங்கள் தண்ணீரை பார்க்கத் தொடங்கியுள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ராமக்கால் நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இதைக் காண சுற்றுப்புற கிராம மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு நீர்த்தேக்கப் பகுதியில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பலரும் இங்கு குளித்து மகிழ்ந்தனர். ராமக்கால் நீர்த்தேக்கம் ஒரு மினி சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x