

வத்தலகுண்டு அருகேயுள்ள கோட்டை கருப்பணசுவாமி கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆயிரக்கணக்கான அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள முத்துலாபுரம் கிராமத்தில் கோட்டை கருப்பணசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் நாள் நடைபெறும் விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
நேற்று நடைபெற்ற விழாவில் திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோட்டை கருப்பணசுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். கையில் அரிவாளுடன் ஊர் எல்லையில் இருந்து ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்த பக்தர்கள் சுவாமியை வழிபட்டு தாங்கள் கொண்டுவந்திருந்த அரிவாளை கோயிலிலேயே காணிக்கையாக வைத்துவிட்டு சென்றனர். முன்னதாக கோட்டை கருப்பணசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்கள் கூறுகையில், எங்கள் மூதாதையர் காலம் முதல் 100 ஆண்டுகளுக்கு மேலாக அரிவாள் காணிக்கை செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. இதை நாங்களும் தொடர்கிறோம். விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், விபத்தில் சிக்கியவர்கள் குணமான பின் இங்கு வந்து அரிவாள் காணிக்கை செலுத்துகின்றனர். விபத்துக்கள் நடக்காமல் இருக்கவும் வேண்டிக் கொள்கின்றனர். எதிரிகளிடமிருந்து தொல்லைகள் வராமல் தடுக்கவும் அரிவாள் காணிக்கை செலுத்தப்படுகிறது என்கின்றனர்.
கோட்டை கருப்பணசுவாமிக்கு காணிக்கையாக செலுத்தப்படும் அரிவாள்களை தயாரிக்க முத்துலாபுரத்திலேயே சில குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பாரம்பரியமாக காணிக்கை அரிவாள் செய்து வருகின்றனர். பக்தர்கள் வெளியில் இருந்து அரிவாள் வாங்கி வராமல் காணிக்கைக்கென பிரத்தியேகமாக இவர்கள் தயாரிக்கும் அரிவாள்களையே வாங்கி காணிக்கை செலுத்துகின்றனர்.
பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டு அடி முதல் 16 அடி வரை அரிவாள்களை செய்கின்றனர். ஒரு பிடியில் ஐந்து அரிவாள்கள் இருப்பதுபோலவும் செய்து தருகின்றனர். காணிக்கையாக செலுத்தப்படும் அரிவாள்கள் கோயில் வளாகத்தில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் அரிவாள் காணிக்கை செலுத்துவதற்காக பக்தர்கள் அதிகம்பேர் வந்து செல்கின்றனர்.