Published : 17 Jan 2021 09:10 AM
Last Updated : 17 Jan 2021 09:10 AM

குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சிறுமலையில் கொண்டாடப்படும் குதிரை பொங்கல் விழா

சிறுமலையில் விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக குதிரைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலைப்பகுதியில் பழையூர், தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, புதூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளது. விளைநிலங்களில் வாழை, எலுமிச்சை, சவ்சவ், அவரை, காப்பி, ஏலக்காய் ஆகிய மலைப் பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

மலைக் கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்கு இங்கு செல்ல சாலை வசதி இல்லை. மேடுபள்ளங்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில்தான் செல்ல வேண்டும். இதனால் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை விளைநிலங்களுக்கு கொண்டு செல்லவும், அறுவடை செய்யப்பட்ட பயிர்களை கொண்டு வரவும் அதிகளவில் மலைப்பாதைகளில் குதிரையை பயன்படுத்துகின்றனர். இதனால் தாங்கள் விவசாயம் செய்ய உதவி புரியும் குதிரைக்கு நன்றி செலுத்தும் விதமாக குதிரைப்பொங்கல் விழா சிறுமலை மலைகிராமத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குதிரைகளை குளிக்க வைத்து, திலகம் இட்டு அவற்றிற்கு முன் பொங்கல் வைத்து மலைக் கிராம மக்கள் வழிபட்டனர். பின்னர் குதிரைகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டு தங்கள் நன்றிக்கடனை செலுத்தினர். குதிரைகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். குதிரைப் பொங்கலை முன்னிட்டு குதிரைகளுக்கு தேவையான உணவுகளை வழங்கி, எந்த வேலையும் செய்யவிடாமல் சுதந்திரமாக மேய விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x