Published : 17 Jan 2021 09:10 AM
Last Updated : 17 Jan 2021 09:10 AM

தொகுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் திமுக 

திண்டுக்கல் 

தமிழக தேர்தல் களத்தில் அதிமுக, திமுக இடையேதான் பிரதான போட்டி என்றாலும் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் களம் இறங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை தேர்வு செய்து தங்கள் கூட்டணி தலைமையில் உள்ள கட்சியிடம் கேட்டு பெறுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

அதிமுக கூட்டணி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் தொகுதிகளில் கடந்த முறை ஏழு தொகுதிகளிலும் அதிமுக கட்சியே போட்டியிட்டது. இதில் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தமுறை மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. காரணம் திண்டுக்கல் மக்களவை தொகுதியையே அதிமுக, பா.ம.க-வுக்கு கடந்தமுறை விட்டுக் கொடுத்தது. தற்போது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்கள், பழநி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆன்மீகத்தலம் என்பதால் பா.ஜ. போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதனால் அதிமுக கூட்டணியில் பா.ஜ., கட்சிக்கு பழநி தொகுதியை ஒதுக்க வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள பா.ம.க., தே.மு.தி.க., கட்சிகள் தங்கள் கூட்டணியை இன்னமும் உறுதிப்படுத்தாமல் உள்ளன. உறுதிப்படுத்தும்பட்சத்தில் பா.ம.க., தே.மு.தி.க., கட்சிகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கேட்க வாய்ப்புள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் கடந்த முறை ஆறு தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கடந்த தேர்தலில் கூட்டணியில் இல்லாத இந்தமுறை கூட்டணியில் இணைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியை கேட்கும் என தெரிகிறது. கடந்தமுறை ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வென்ற திமுக, இந்தமுறை கூட்டணிக் கட்சிக்கு தொகுதிகளை விட்டுக்கொடுக்கக் கூடாது, அனைத்திலும் திமுகவே போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.

காரணம் தமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக வெற்றிபெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவர் பதவியை கைப்பற்றியது என திமுகவிற்கு அதிக ஆதரவுள்ள மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தை கருதுவதால், இந்த முறை ஏழு தொகுதிகளிலும் போட்டியிட மாவட்ட திமுக விரும்புகிறது.

ஆனால் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்புகிறது. கடந்த முறை வேடசந்தூர் தொகுதியில் போட்டியிட்டதற்கு பதிலாக இந்தமுறை நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடவும் காங்கிரஸ் கட்சி விருப்பம் தெரிவித்து வருகிறது. கூட்டணி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு வெளிப்படும்.

மேலும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை ஏழு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. தற்போதைய நிலையில் அ.ம.மு.க.வும் ஏழு தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்புள்ளது. மொத்தத்தில் தற்போதைய நிலையில் ஐந்துமுனைப் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணிகளை எதிர்பார்க்காமல் அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் களம் இறங்கி தங்கள் தேர்தல் பணியை தொடர்ந்து நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னமும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் முடுக்கி விட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x