Published : 17 Jan 2021 09:10 AM
Last Updated : 17 Jan 2021 09:10 AM

பழநி அருகே ஜல்லிக்கட்டு: பெரியகலையம்புத்தூரில் சீறி பாய்ந்த காளைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழநி அருகேயுள்ள பெரிய கலையம்புத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

இதன் தொடக்கமாக திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டாக பழநி அருகேயுள்ள பெரியகலையம்புத்தூரில் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் வாடிவாசலில் இருந்து காளியம்மன் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. ஐந்து பிரிவுகளாக மாடுபிடிவீரர்கள் பிரிக்கப்பட்டு களம் இறக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டுக்கொண்டு பிடித்தனர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றன. காளைகளை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வீரர்களிடம் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகளை வென்றனர். தங்கக்காசு, கட்டில், மிக்சி, கிரைண்டர், பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். முன்னதாக காளைகளுக்கு கூரிய கொம்புகள் உள்ளதா, காயங்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்து, அதன் பின்னரே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதித்தனர். இதற்காக கால்நடை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் செயல்பட்டனர்.

இதேபோல் மாடுகளை பிடிக்க களம் இறங்கிய வீரர்களும் பரிசோதிக்கப்பட்டனர். காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு டி.எஸ்.பி., சிவா தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் இருக்கும் பகுதிக்கு மாடுகள் சென்றுவிடாமல் தடுக்கவும், மாடுபிடி வீரர்கள் அல்லாதோர் களத்திற்குள் வருவதை தவிர்க்கவும் இரண்டு அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பழநி கோட்டாட்சியர் அசோகன் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் விலங்குகள் நலவாரிய அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்காணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x