விழுப்புரம் நகரவாசிகள் மகிழ்ச்சி: காணாமல் போன கோயில் குளம் கண்டெடுப்பு

சீரமைக்கப்பட்ட குளம்
சீரமைக்கப்பட்ட குளம்
Updated on
2 min read

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது ஆதீவாலீஸ்வரர் கோயில். இக்கோயிலையொட்டி குளம் ஒன்று இருந்து வந்தது. இதனை, ‘பூந்தோட்டம் குளம்’ என்று நகராட்சி நிர்வாகத்தினர் தங்களின் ஆவணங்களில் பதிவேற்றியுள்ளனர். பொதுவாக விழுப்புரம் நகர மக்களால், ‘கோயில் குளம்’ என அழைக்கப்பட்ட இக்குளத்தில் கடந்த 20 ஆண்டுகளில் குப்பைக் கூளங்களை கொட்டி, குளத்தையே காணாமல் ஆக்கி விட்டது நகராட்சி நிர்வாகம்.

இனியும் இதில் குப்பைகளைக் கொட்ட முடியாது என்று சுதாரித்துக் கொண்ட விழுப்புரம் நகராட்சி, கா.குப்பம் அருகில் எருமனந்தாங்கலில் குப்பைகளைக் கொட்டத் தொடங்கியது. நகராட்சியின் செயலால் மேடாகி போன குளம் மைதானமாக மாறியது. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அந்த இடத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அரசியல் கட்சியினர் அனைவரும் அந்த இடத்தில் ‘பொறுப்பு’டன் பொதுக் கூட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கிடையே மூடப்பட்ட குளத்தின் மேல் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள 90 களில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

குளத்தை மீட்க வலியுறுத்தி ‘நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பு கையெழுத்து இயக்கம் நடத்தியது. அதன்பிறகு, பேருந்து நிலைய விரிவாக்கத் திட்டம் கைவிடப்பட்டது. குப்பை மேடாக அந்த இடம் அப்படியே இருந்து வந்தது.‘கரிகாலன் பசுமை மீட்பு படை’ என்ற அமைப்பு சில வருடங்களுக்கு முன் விழுப்புரம் ஆட்சியரிடம் “குளத்தின் குப்பைகளை நாங்கள் அள்ளிக்கொள்கிறோம். அள்ளப்பட்ட குப்பைகளை கொட்ட இடம் மட்டும் ஒதுக்கித் தாருங்கள்“ என்று கேட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் இதனை பொருட்படுத்தவில்லை.

இதற்கிடையில், இங்கு நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து கொள்ளவும், நகராட்சி சார்பில் வணிகவளாகம் அமைக்கவும் முடிவெடுக்கப் பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததால் மேற்குறிப்பிட்ட முடிவுகள் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல்வர் பழனிசாமி ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பூந்தோட்டம் குளம் சீரமைப்பு மற்றும் பூங்காவுடன் கூடிய நடைபாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து பணிகள் நடந்தன. சீரமைக்கப்பட்ட குளம், நடைப்பயிற்சி செல்ல ஏதுவாக குளத்தைச் சுற்றி பாதைகள், அருகில் குழந்தைகள் விளையாடும் சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுக் கருவிகள், இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் கருவிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. “ஏறக்குறைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இம்மாத இறுதியில் முதல்வர் பழனிசாமி இக்குளத்தை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார்” என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குப்பைக் கூளமாக மண்டிக் கிடந்து, ஒரு தலைமுறைக்கே தெரியாமல் போன குளம், அகழாய்வு செய்யப்பட்டு அழகாய் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறது. விழுப்புரம் நகர வாசிகள் ஆர்வத்தோடு வந்து பார்த்து செல்கின்றனர். ஆதீவாலீஸ்வரர் கோயில் கதையையும், அதையொட்டி இருக்கும் இக்குளத்தின் கதையையும் சொல்லிச் செல்கின்றனர்.
“இனிமேலும் இக்குளத்தை போற்றி பேணி பாதுகாக்க வேண்டும். அந்தப் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல; விழுப்புரம் நகர மக்களான நமக்கும் இருக்கிறது“ என்கின்றனர் நகர் புறத்தில் சூழியல் பேணும் இளைஞர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in