

ஒரு வழியாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என கொண்டாட்டங்கள் முடிந்து ஜனநாயகக் கடமையாற்றும் தேர்தல் திருவிழா தொடங்கவிருக்கிறது. அடுத்து வரும் மாதங்கள் ஊர்கள் தோறும் தேர்தல் களை கட்டும். தமிழகத்தின் இரு பிரதானக் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரி மாதமே தொடங்கி, பீடு நடை போட, மற்றொரு புறம் ரத்தத்தின் ரத்தங்களும், உடன் பிறப்புகளும், காம்ரேட்டுகளும், கதர் சட்டைகளும், பாட்டாளிகளும், சிறுத்தைகளும், தமிழ் தேசியம் காண விழைவோரும் மற்றும் தாமரை தவப்புதல்வர்களும் தங்களுக்கான களத்தை தேர்வு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சிக்குள் நடக்கும் ரகசியத் தேர்வு
யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி யிடுவார்கள் என்று அந்தந்த கட்சிகளின் தொண்டர்களும் கணிப்புகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் கழகக் கண்மணிகள் பம்பரமாக சுழல, கழக அணிகளில் இடம்பெறும் கூட்டணிக் கட்சிகளும் ரகசிய தேர்வில் ஈடுபட்டுள்ளது. கடலூர் தொகுதியில் அமைச்சர் சம்பத் மீண்டும் களம் காண தீவிரம் காட்டி வருகிறார். எதிர் முகாமில் திமுகவில் ஐயப்பனும், மாவட்டச் செயலாளர் மூலம் குணசேகரனும் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகின்றனர். காங்கிரஸூம் ஒருபுறம் திமுக கதவை தட்டிக்கொண்டிருக்கிறது.
குறிஞ்சிப்பாடியைப் பொறுத்தவரை திமுக தரப்பில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் என்பது ஏறக்குறையை உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக தரப்பில் கடலூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் சி.கே.சுப்ரமணியன் ஆயத்தமாகி வருகிறார். பாமகவும் குறிஞ்சிப்பாடிக்கு குறி வைக்கிறது. ஆனாலும் முதல்வர் பழனிசாமியோடு நெருக்கம் காட்டும் சி.கே.எஸ். தொகுதியை பெற்று விடுவார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
நெய்வேலித் தொகுதியைப் பொறுத்தவரை சிட்டிங் எம்எல்ஏவான சபா.ராஜேந்திரன் தொகுதி மீண்டும் தனக்கே என்பதில் உறுதியாக இருக்கிறார். தொகுதி முழுக்கு ஒரு ரவுண்டு அடித்து, மீண்டும் வலம் வர தயாராகி விட்டார். அதிமுக தரப்பில் சொரத்தூர் ராஜேந்திரன் களம் காண முதல்வரின் ஆசியை எதிர்நோக்கியிருக்கி இருக்கிறார். அமைச்சர் சம்பத்தின் ஆசியோடு ஏ.கே.சுப்ரமணியன் களம் காண துடிக்கிறார்.ஆனாலும் திமுக கூட்டணியில் காங்கிரஸில் முத்தாண்டிக்குப்பம் ராதாகிருஷ்ணனுக்கு தொகுதியை ரிசர்வ் செய்ய அவரது அபிமானத் தலைவர் முடிவு செய்திருந்த நிலையில், காம்ரேட்டுகளோ சிபிஎம் பாலகிருஷ்ணனுக்கு வேண்டும் என திமுக தலைமையிடம் காய் நகர்த்தி வருவதை அறிந்த, அழகான கிரி அமைதியாகி விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் வேல்முருகன்
பண்ருட்டியைப் பொறுத்தவரை அதிமுக தரப்பில் சத்யா பன்னீர்செல்வம் தனது இருப்பை, அண்மையில் நடத்திய செயல் வீரர்கள் கூட்டத்தில் நிரூபித்து விட்டதால், ‘சீட் அவருக்கு உறுதி’ என்கின்றனர் அக்கட்சியினர். திமுகவிலோ கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகனுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், அவர் அதற்கான களப்பணியில் இறங்கி விட்டதாகக் கூறுகின்றனர். இதனிடையே சைக்கிளை குறுக்கே விட்டு சத்யாவுக்கு குடைச்சல் கொடுக்க அதிமுகவின் மற்றொரு தரப்பு களமிறங்கியிருப்பதாகவும், வாசன் மூலம் அதிமுக தலைமையிடம் பேசி பண்ருட்டியை பெற்று, நெடுஞ்செழியனை களமிறக்கத் துடிக்கிறாராம் சமத்தானவர். இதன்மூலம் ஒரு கல்லில் இரு மாங்காயை பறித்து தனது பகையை பழிதீர்க்கப் பார்க்கிறாராம் அவர். இதையறிந்த வேல்முருகனோ, நெடுஞ்செழியன் என்றால் தனது வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என மார் தட்டுகிறாராம்.
ஆனால் சத்யா தரப்போ, முதல்வரின் நேரடி தொடர்பில் இருப்பதால் சமத்தானவரின் சாதுர்யம் இங்கு செல்லுபடியாகாது என்கின்றனர். சிதம்பரத்தை பொறுத்தவரை அதிமுக தரப்பில் தற்போதைய எம்எல்ஏ பாண்டியனுக்கு சீட் உறுதியாகி விட்டதைப் போன்று களம் 'மணியாக" மாறியிருக்கிறதாம். பாட்டாளிகளும் சிதம்பரத்தை கேட்டு தர்க்கம் செய்து வருவதால், தர்மசங்கடமான சூழலில் தவிக்கிறதாம் அதிமுக தலைமை அதேநேரத்தில் திமுக கூட்டணியில் காம்ரேட் நெய்வேலிப் பக்கம் பார்வையை திரும்பியதால், கதர்சட்டைக் காரர்கள் தங்களது அழகான தலைவருக்குத்தான் தொகுதி என கிரி வலம் வரத் தொடங்கி விட்டனர்.
புவனகிரியை கேட்கும் பாஜக
புவனகிரியைப் பொறுத்தவரை திமுகவில் மீண்டும் சரவணனுக்கே வாய்ப்புக் கிட்டும் என்பது ஓரளவுக்கு உறுதியாகியிருக்கும் நிலையில், அதிமுக தரப்பில் அருண்மொழித்தேவன் புவனகிரியை வளைக்க வரிந்து கட்டி களப் பணியாற்றி வருகிறார். ஆனால் தாமரையோ, ‘புவனகிரி எங்களின் புண்ணிய பூமி, எங்களுக்கு விட்டுத் தரவேண்டும்’ என விடாப்பிடியாக நிற்கிறதாம். ஆனாலும் அதிமுக தொண்டர்கள் அருண்மொழித்தேவன் தான் வேட்பாளர் என உறுதியாக உள்ளனர்.
காட்டுமன்னார்கோவிலைப் பொறுத்தவரை அதிமுக தரப்பில் மீண்டும் முருகுமாறனுக்கே வாய்ப்பு என்பது ஊரறிந்த ரகசியமாய் இருக்க, திமுகவிலோ சிறுத்தைகளுக்கு தாரை வார்க்கப்படும் நிலை உள்ளது.
விருத்தாசலத்தில் விஜய பிரபாகரன்
விருத்தாசலத்தைப் பொறுத்த வரை தற்போதைய எம்எல்ஏ வி.டி.கலைச்செல்வன் தொகுதி மீண்டும் தன்னிடம் தான் வரும் உறுதியோடு ஒவ்வொரு கூட்டத்திலும் தனது 5 ஆண்டுகால செயல்பாடுகளை விலாவாரியாக எடுத்துரைக்கிறார். ஆனால் நெய்வேலித் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன், வடக்கு மண்டல பொறுப்பாளர் சிவிஎஸ் ஆசியோடு விருத்தாசலத்தை விதை விதைக்க காத்திருக்கிறாராம். ஆனால் கூட்டணியில் தேமுதிக இணையும் பட்சத்தில் விருத்தாசலத்தில் கணவருக்கு கிடைத்த வாய்ப்பைப் போன்று தனக்கோ அல்லது தனது மகன் விஜய பிரபாகரனுக்கோ அமையும் வகையில், விருத்தாசலத்தை விட்டுத் தரும்படி கோரிக்கை வைக்கத் திட்டமிட்டுள்ளாராம். திமுகவில் காங்கிரஸுக்கே ஒதுக்கப்படும் என கருத்து நிலவுவதால் திமுகவினர் போதிய ஆர்வம் காட்டவில்லை.
கூட்டணி முடிவாகி குஸ்திகள் தொடங்கும்
திட்டக்குடியைப் பொறுத்தவரை திமுகவில் வெ.கணேசனே மீண்டும் களம் காண்பது உறுதி என்றாகி விட்ட நிலையில், அதிமுக தரப்பில் அருண்மொழித்தேவன் பரிந்துரையின் பேரில் மகளிர் அணியைச் சேர்ந்த பத்மாவதி களம் காண்பார் எனக் கூறப்பட்டாலும் மனோகரன் என்பவர் மணியோடு அவ்வை சண்முகி சாலையில் காத்திருக்கிறாராம். ஆனால் தாமரையோ தடா பெரியசாமிக்கு ஒதுக்கும்படி தடாலடியாக குதிக்கிறதாம். தற்போதே அரசல் புரசலாக வேட்பாளர் விவரம் குறித்த தகவல்கள் தாறுமாறாக வந்து கொண்டிருக்க, இன்னும் சில வாரங்களில் கூட்டணி பங்கீடுகள் முடிந்து, குஸ்திகள் ஆரம்பமாகும்.
அதன்பின்னர் யார் யார் எந்தக் கட்சியில் நிற்கின்றனர் என்பதும் பட்டியலிடப்படும். அதுவரை சற்று பொறுத்திருப்போம். பிரதான இரு கூட்டணிகளின் கதைகள் மேலே வந்தவை. இதைத் தாண்டி மாற்றம் காண விரும்பும் கட்சிகளிலும், களம் காண்போர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. யார் யார் எங்கே என்று அடுத்தடுத்த நகர்வுகளில் தெரிந்து விடும்.