

“திருவள்ளுவர் தினத்தில் போற்றதலுக்குரிய திருவள்ளுவரை தலைதாழ்த்தி வணங்குகிறேன். அவருக்கு வாய்த்த மகத்தான அறிவை, ஞானத்தை அவரது படைப்பு பிரதிபலிக்கிறது. திருவள்ளுவரின் லட்சியங்கள் தலைமுறை தாண்டி மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய இளைஞர்கள் அனைவரும் திருக்குறளைப் படிக்க வேண்டும்”
- திருவள்ளுவர் தினத்தன்று, பிரதமர் மோடி சூட்டிய புகழாரங்கள் இவை.
தொன்று தொட்டு நம் தமிழ்ச் சான்றோர் பலரும் பலவாறு பாராட்டி வரும் திருக்குறளை, அதை தந்த திருவள்ளுவரை நாம் நினைவு கூற ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உயர்ந்த வாழ்வியல் நெறி, நல்லறம், அரசியல், ஆழ்ந்த ஞானம் என அனைத்தையும் தந்த அந்த ஞானப் புலவனை அந்த நன்னாளில் பல்வேறு தமிழ் அமைப்புகள் நினைவு கூர்ந்தன.விருத்தாசலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அமைப்பு சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழாவில், கொட்டும் மழைக்கிடையேயும் திருவள்ளுவர் வேடம் புனைந்து, தங்களின் கனீர் குரலில் குறளமுதம் படைத்தனர் சிறார்.
“என் வாழ்வில் இனி வரும் நாட்களில் குறள் இன்றி என் குரல் இல்லை’‘ என்று நிகழ்வில் பங்கேற்ற சிறுமி சஞ்சனா கூற, கூடி இருந்தோர் அச்சிறுமியை அங்கீகரித்து ஆனந்தமடைந்தனர். விழாவக்கு வந்திருந்த சிறார் அனைவரும் திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்த மழலைகளை பார்க்கும் போது, ‘நல்ல விதைகளை விதைத்திருக்கிறார்கள்’ என்ற நம்பிக்கை கீற்று தென்பட்டது.