அன்று அவர்... இன்று இவர்...

பொங்கலன்று அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மருத்துவர் முத்தையன்.
பொங்கலன்று அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மருத்துவர் முத்தையன்.
Updated on
1 min read

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக மருத்துவ அணி செயலாளர் ஆனார் லட்சுமணன், பின் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஆனார். அவருக்கு, அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் லட்சுமணனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி, அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சென்றது.

அதன்பின் அதிமுகவில் ஓரங்கட் டப்பட்ட லட்சுமணன், கடந்த 18.8.2020 அன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, திமுகவின் மாநில மருத்துவரணி இணை செயலாளர் ஆனார். ஏறக்குறைய இதே போல மற்றொரு கதையும் தற்போது நடந்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விழுப்புரத்தில் திமுக சார்பில் போட்டியிட்டார் மாவட்ட துணை செயலாளர் மருத்துவர் முத்தையன்.

இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரனிடம் 1,93,337 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 2019-ல் திண்டிவனம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் உயிரிழந்தார்.மக்களவைத் தேர்தலுக்குப் பின், திமுகவின் கட்சி நடவடிக்கைகளில் ஒதுங்கி இருந்த முத்தையன், இரு தினங்களுக்கு முன் பொங்கலன்று அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை யில் அதிமுகவில் இணைந்தார்.

“லட்சுமணன் திமுகவில் இணைந்தது விழுப்புரம் மாவட்ட அதிமுகவினரிடையே கவுரவக் குறைச்சலாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு எதிர் தரப்பில் இருந்து, மருத்துவர் முத்தையன் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தார். அதனால் அவரை சேர்த்துக் கொண்டோம்’‘ என்கின்றனர் அதிமுகவினர். ‘தேர்தலில் சீட்’ என்ற நிபந்தனையோடு முத்தையன் அதிமுகவில் ஐக்கிய மாகியிருக்கிறார். கழகங்களை மாற்றியி ருக்கும் லட்சுமணன், முத்தையன் இருவரும் எலும்பு முறிவு மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in