Published : 17 Jan 2021 08:01 AM
Last Updated : 17 Jan 2021 08:01 AM

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் காணும் பொங்கல்: ஒருபுறம் உற்சாகம் மறுபுறம் சோகம்

காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் வெளிப் பிரகாரத்தில் நடைபெற்ற சிலம்பாட்டம். படம்: க.ரமேஷ்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் காணும் பொங்கல் வழக்கத்திற்கு மாறாக ஒரு புறம் உற்சாகமாகவும் மறுபுறம் சோகத்துடனும் கழிந்தது.
வழக்கமாக காணும் பொங்கல் நாளன்று கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களிடையே கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பொங்கல், மாட்டுப் பொங்கல் நாட்களை விட மூன்றாம் நாள் கொண்டாட்டம் களை கட்டும்.

இந்த முறை கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முக்கிய சுற்றுலா தலங்களில் மக்கள் கூட மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்திருந்தன.
மீறி கடலூர் சில்வர் பீச்சுக்கு வந்தவர்கள் காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பப்
பட்டனர்.

பிச்சாவரம் சுற்றுலா தலத்திற்கு வந்தவர்கள் படகு குழாம் இயங்காததால் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆனாலும், கடலூர், சிதம்பரம் நகரை ஒட்டியுள்ள பகுதியில் ஆங்காங்கே குடும்பத்தினர் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், ஆற்றங்கரைகளில் கூடுவதும் என உற்சாகமாக பொழுதை கழித்தனர். காணும் பொங்கலையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் வெளிப் பிரகாரத்தில் பெண்களின் கும்மியாட்டம், ஆண்களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்றன. அங்கு பெரிய அளவில் கெடுபிடி இல்லை.

மாவட்ட நிர்வாகத்தின் தடையால் வெறிச்சோடிய செஞ்சிக் கோட்டை.  படம்: எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக் கோட்டை, திருவக்கரை, மயிலம் கோயில்கள், கடற்கரை பகுதியான தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதிக்கு தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் ஆற்றங்கரைப்பகுதிகளில் கூட்டமாக இருக்காமல் தனித்தனியே அமர்ந்து காணும் பொங்கலை கொண்டாட காவல்துறை அனுமதி அளித்தது. அந்த வகையில் விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் விழுப்புரம் நகர் பகுதி மக்கள் குடும்பத்தோடு ஒன்று கூடி வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் ஆற்று மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.

காணும் பொங்கலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 27 இடங்களில் சற்று பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளும், பில்ராம்பட்டு, குயிலாப்பாளையம் கிராமங்களில் மஞ்சு விரட்டும் நடைபெற்றது. குயிலாப்பாளையம் மஞ்சு விரட்டில் கூட்டம் இருந்தாலும் கூட கடந்தாண்டை ஒப்பிடும் போது கூட்டம் குறைவாகவே இருந்தது.புயலுக்கு பின் பெய்த தொடர் மழையால் நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் வயல் வெளியில் தற்போதும் நீர் தேங்கி நிற்கிறது. இந்த பாதிப்பால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார கிராமங்களில் இந்த முறை காணும் பொங்கல் சோகத்துடனே முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x