

திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவையொட்டி, அண்ணாமலையார் நேற்று கிரிவலம் சென்றார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் இரவு திருவூடல் திருவிழா தொடங்கியது. அம்பாளை வணங்காது சிவபெருமானை மட்டும் பிருங்கி மகரிஷிவணங்கி வந்தார். இதனால், அம்பாள் சினம் கொண்டு, சுவாமியுடன் ஊடல் ஏற்பட்டதாகவும், பின்னர் அவர்களது கூடலை கொண்டாடும் விழாவாக திருவூடல் திருவிழா நடைபெறுகிறது என புராணங்கள் கூறுகின்றன.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு திருவூடல் விழாவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு இடையே ஊடல் ஏற்படுகிறது. அப்போது அண்ணாமலையார் கோயிலுக்கு அம்மனும், குமரக் கோயிலுக்கு அண்ணாமலையாரும் சென்றுவிட்டனர்.
இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார் நேற்று கிரிவலம் சென்று அருள்பாலித்தார். கிரிவலப்பாதையில் அவருக்கு மகா தீபாராதனை காண்பித்து பக்தர்கள்தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி திரும்பியதும் மறுவூடல் விழா நடைபெற்றது.
தீர்த்தவாரி ரத்து
திருக்கோவிலூர் அருகே உள்ளமணலூர்பேட்டையில் தை மாதம்5-ம் தேதி ஆற்று திருவிழா நடைபெறும். அங்கு நடைபெறும் தீர்த்தவாரியில் அண்ணாமலையார் எழுந்தருளி அருள்பாலிப்பார். இந்தாண்டு ஆற்றுத் திருவிழாவுக்கு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், அண்ணாமலையார் தீர்த்தவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.