பள்ளி மாடியில் இருந்து விழுந்து மாணவி மரணம் - திருவொற்றியூரில் பரபரப்பு: உறவினர்கள் மறியல்

பள்ளி மாடியில் இருந்து விழுந்து மாணவி மரணம் - திருவொற்றியூரில் பரபரப்பு: உறவினர்கள் மறியல்
Updated on
1 min read

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியின் மொட்டை மாடியில் இருந்து 8-ம் வகுப்பு மாணவி கீழே விழுந்து இறந்தது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா, பெற்றோர், ஆசிரியர்கள் திட்டினார்களா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை அடுத்த எண்ணூர் சிவகாமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோதை. இவர்களது மகள் வைஷ்ணவி (13), திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். காலையில் பள்ளிக்கு செல்லும் வைஷ்ணவி மாலை 3.30 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவாள்.

பதற்றத்துடன் தேடிய தாய்

வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு சென்ற வைஷ்ணவி மாலை 4 மணி ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால், மகளை தேடிக்கொண்டு பள்ளிக்கு சென்றார் கோதை.

ஆனால், பள்ளியில் வைஷ்ணவி இல்லை. அவரது தோழிகளிடம் விசாரித்தார். வைஷ்ணவியை பார்க்கவில்லை என்று அவர்கள் கூறினர். அதிர்ச்சி அடைந்த கோதை உடனடியாக செல்போனில் கணவருக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள், தெரிந்தவர்கள் வீடுகளிலும் தேடினர். எங்கும் வைஷ்ணவி இல்லை.

ஒவ்வொரு வகுப்பாக தேடினர்

குழப்பம் அடைந்த இருவரும் மீண்டும் பள்ளியிலேயே விசாரிக்கலாம் என்று இரவு 7.30 மணி அளவில் அங்கு சென்றனர். வழக்கம்போல காலையிலேயே புறப்பட்டு பள்ளிக்கு வந்த மகளை காணவில்லை என பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். பள்ளியிலேயே வைஷ்ணவி எங்காவது இருக்கலாம் என்பதால், ஆசிரியர்களும் வைஷ்ணவியின் பெற்றோரும் ஒவ்வொரு வகுப்பாக தேடினர்.

மாடியில் இருந்து குதிக்கும் சத்தம்

4-வது மாடியில் உள்ள வகுப்பறைகளில் அவர்கள் தேடிக்கொண்டு இருந்தபோது, திடீரென மொட்டை மாடியில் இருந்து யாரோ கீழே குதிக்கும் சத்தம் கேட்டது. உதயகுமார், கோதை மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து கீழே ஓடி வந்து பார்த்தனர்.

தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த வைஷ்ணவி பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.

அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவளை உடனடியாக கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வைஷ்ணவி பரிதாபமாக இறந்தாள். தகவல் கிடைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்டனர்.

கதவு பூட்டியிருந்ததா?

பள்ளியின் மொட்டை மாடிக்கு மாணவர்கள் செல்வது ஆபத்து என்பதால் அங்குள்ள கதவு எப்போதும் பூட்டியே இருக்கும். அப்படி இருக்கும்போது, மாணவி வைஷ்ணவி எப்படி மொட்டை மாடிக்கு சென்றாள் என தெரியவில்லை என பள்ளி நிர்வாகம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in