எப்போது கட்டப்பட்டது என்பதில் குழப்பம்; வடபழனி முருகன் கோயிலில் திருப்பணிகள் தற்காலிக நிறுத்தம்: தொல்லியல் துறை அறிக்கைக்காக காத்திருப்பு

எப்போது கட்டப்பட்டது என்பதில் குழப்பம்; வடபழனி முருகன் கோயிலில் திருப்பணிகள் தற்காலிக நிறுத்தம்: தொல்லியல் துறை அறிக்கைக்காக காத்திருப்பு
Updated on
1 min read

சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த மார்ச்12-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருப்பணிகள் தொடங்கப்பட்டன. 2020 இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோயில்கள் திறக்கப்படவில்லை. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் முதல் திருப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

புகார் மனு

இந்நிலையில், 100 ஆண்டுகள் பழமையான வடபழனி முருகன்கோயிலில் உரிய அனுமதி பெற்று திருப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று இந்து சமயஅறநிலையத் துறை ஆணையரிடம் பக்தர் ஒருவர் புகார் கொடுத்தார். இதையடுத்து, அங்கு திருப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருப்பணிகள் மேற்கொள்வதற்கு, 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயில்கள் என்றால் மாநில அளவிலான கமிட்டியிடமும், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில் என்றால் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டியிடமும் அனுமதி பெற வேண்டும். வடபழனி முருகன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள மாநில அளவிலான கமிட்டியிடம் அனுமதி பெறப்பட்டு விட்டது.

கோயிலின் காலம் குறித்துதற்போது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. கோயில் கட்டப்பட்ட ஆண்டைகண்டறிய தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயில் என்பது ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டால் உடனே திருப்பணிகள் தொடங்கப்படும். அல்லது, உயர் நீதிமன்ற கமிட்டியிடம் அனுமதி கோரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in