Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

உதயநிதி குடும்பத்தினரை கேலி செய்து சுவரொட்டி ஒட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையரிடம் திமுக புகார்

சென்னை

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் பற்றி கேலியாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பற்றி அவதூறாகவும், கேலியாகவும் சித்தரித்து, தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகம் என்றபெயரில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவினர், அவர் மீது வேண்டுமென்றே அபாண்டமான குற்றச்சாட்டுகளையும், தரமற்ற விமர்சனங்களையும் சுமத்தி வருகின்றனர்.

தற்போது உதயநிதி மற்றும்அரசியலுக்கே வராத அவரதுகுடும்ப பெண் உறுப்பினர்களின் படங்களைக் கொண்ட சுவரொட்டிகளை சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வண்ணத்தில் ஒட்டியுள்ளனர். இந்திய அச்சக சட்டத்தின்படி சுவரொட்டி அச்சிடுவோர் மற்றும் வெளியிடுவோர் பெயர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அதற்கு மாறாக செயல்பட்டதுடன், பெண்களை இழிவுபடுத்தும் கெட்ட நோக்கோடு செயல்படும் அதிமுக நிர்வாகிகள், அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x