

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் மார்ச்முதல் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவையை, பரங்கிமலை வரை நீட்டிக்க தெற்கு ரயில்வேமுடிவு செய்தது. இதையடுத்து, வேளச்சேரியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு இதற்கானபணிகள் தொடங்கப்பட்டு, தூண்களும் அமைக்கப்பட்டன. அதன்படி, வேளச்சேரியை அடுத்துபுழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கேட்டபோது தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் உள்ள பரங்கிமலையையும், பறக்கும் ரயில் முனையமான வேளச்சேரியையும் இணைத்தால், அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். மின்சாரரயில் பயணிகளுக்கும் இது மிகவும் வசதியாகஇருக்கும். இதை கருத்தில் கொண்டே வேளச்சேரி - பரங்கிமலை ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.
ஆனால், ஆதம்பாக்கம் - பரங்கிமலைஇடையே சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் நீண்ட நாட்களாக பிரச்சினை நீடித்தது. இதற்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதால், திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இப்பணிகள் நிறைவடைய 18 மாதங்கள் ஆகும்.
இருப்பினும், வேளச்சேரி - ஆதம்பாக்கம் வரையிலான திட்டப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. எனவே, சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும்மின்சார ரயில்கள் வரும் மார்ச் முதல் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.