

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் கே.செந்தில் கூறியிருப்பதாவது: மருத்துவப் பணியில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி பெரிய உடனடி பக்க விளைவுகள் இல்லாத நிலையில் அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. அது உண்மையாக இருந்தாலும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் அதனைப் பற்றி கருத்துக் கூற இயலும்.
அவசர அனுமதியுடன் வழங்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள முறையுடன் 18 வயதுக்கு மேல்உள்ள அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் பிற நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுப்பவர்கள் தொடர்புடைய சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு தடுப்பூசிகளை பெறலாம். பயனாளிகள் இதை கருத்தில் கொண்டு, சுயமாக முடிவெடுக்கவும்.
கரோனா தொற்று சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் அரசு துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஊழியர்களே ஈடுபட்டனர். எனவே, தடுப்பூசிகளை அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் வழங்க வேண்டும்.
அதன்பின்னர், தனியார் மற்றும் வெளி சந்தைகளில் வழங்கப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் இந்த தடுப்பூசி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் விதமாக, சங்க நிர்வாகிகள் தாமாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்வார்கள் என்றார்.