செங்கை மக்களின் 20 ஆண்டு கோரிக்கை நிறைவேறும் வகையில் ரூ.60 கோடியில் கொளவாய் ஏரியில் 3 தீவுகள்

சமீபத்தில் பெய்த கன மழையால் முழு கொள்ளளவை எட்டிய கொளவாய் ஏரி.
சமீபத்தில் பெய்த கன மழையால் முழு கொள்ளளவை எட்டிய கொளவாய் ஏரி.
Updated on
2 min read

செங்கல்பட்டு ரயில் நிலையத்தைஒட்டி அமைந்துள்ள கொளவாய் ஏரி, செங்கல்பட்டில் உள்ள ஏரிகளில் முக்கியமானது. எந்தக் கோடையிலும் தண்ணீர் வற்றாமல் நிரம்பி காட்சியளிக்கும் 2,210 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி, 627 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

செங்கல்பட்டில் உள்ள குண்டூர் ஏரி மற்றும் சுற்றுப்புற ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், இங்கு வந்தடையும் வகையில் நீர் வரத்து கால்வாய்கள் உள்ளன.ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், நீஞ்சல் மடுவு கால்வாய் வழியாக, பொன்விளைந்தகளத்தூர் ஏரியைச் சென்றடையும்.

இதேபோல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சூர், பட்டரவாக்கம், வீராபுரம், தேனூர், அம்மணம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயபாசனத்துக்கும் இந்த ஏரி பயன்படுத்தப்பட்டது.

தற்போது ஏரியில் மீன்குஞ்சுகள் விடப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மீன்வளத் துறை சார்பில் கூட்டு வளைவு அமைக்கப்பட்டு மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஏரி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்ட நிலையில், இன்றுவரை அப்படியே உள்ளது. 1998-ல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இந்த ஏரியில் படகு குழாம் அமைத்தது. அதன்பின், ஏரி நீர் மாசடைந்து படகுப் பயணம் செய்தோருக்கு சில விஷப் பூச்சிகள் கடித்து, தோல் வியாதிகள் ஏற்பட்டதால் அடுத்த 2 ஆண்டுகளிலேயே படகு குழாம் மூடப்பட்டது.

ஏரியின் ஓரத்திலும், ஏரிக்கு நீர் வரும் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், ஏரிக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதைத் தூர்வாரி சீரமைக்க, சமூக ஆர்வலர்கள் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் இந்த ஏரியை ஒட்டி 16-ம்நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை உள்ளது. தற்போது ஏரியை புனரமைத்து, தூர்வாரி, படகு சவாரி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அரசு ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிறைவேற உள்ள மக்களின் 20 ஆண்டு கோரிக்கைக்கு விரைவில் டெண்டர் விடப்படவுள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் பிரஷ்னேவ் பிரபு கூறியதாவது: ஏரியைதூர்வாரி சீரமைக்க, அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்படவுள்ளது. ஏரியைத் தூர்வாரி, சென்னைக்கு நீரை அனுப்ப உள்ளோம். மேலும், படகு குழாம், பூங்கா, அருவி, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பணிகளும் செய்யப்பட உள்ளன.

ஏரி கரையை சுற்றிலும் பொதுமக்கள் நடந்து செல்ல வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும் ஏரியின் மையப்பகுதியில் 3 இடங்களில் தீவுகள் அமைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்படுகிறது. ஏரிக்குவரும் அனைத்து நீர்வரத்து கால்வாய்களும் சீரமைக்கப்பட உள்ளன.

மேலும் கோட்டையை சீரமைத்து கோட்டையைச் சுற்றியுள்ளஅகழிகள் பழைய நிலைக்கு மாற்றப்பட உள்ளன. செங்கல்பட்டு சிறப்புகளை விளக்கும் புகைப்படக்காட்சி அமைக்க உள்ளோம்.மேலும், கொளவாய் ஏரி புதுப்பொலிவைப் பெற்று ஒரு சுற்றுலாத்தலமாக மீண்டும் மாறும் என்று எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in