Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

சென்னையில் அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள் 568 பேருக்கு கரோனா தொற்று தடுப்பூசி

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 568 மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனா தடுப்பூசி போட்டனர்.

தமிழகத்தில் 166 இடங்களில் கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. சென்னையில் அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை, போரூர், ஈஞ்சம்பாக்கம், மாதவரம் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. டீன்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 568 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன், இந்திய மருத்துவ சங்க தலைவர் ஜெயலால், தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில், சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் நேற்று கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனை தடுப்பூசிமையத்தில், மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பிரதாப் சி.ரெட்டி கரோனா தொற்று தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, “கரோனா தடுப்பூசி அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தடுப்பு மருந்து. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” என்றார்.

சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில், அதன் இயக்குநர் பிரசாந்த் ராஜகோபாலன் மற்றும் பிரபல மருத்துவர்களான அமர் அகர்வால், அதியா அகர்வால், முகமது ரேலா,கமலா செல்வராஜ், எம்.சுவாமிக்கண்ணு, விஸ்வநாதன் மோகன், விமலா ராமலிங்கம், கே.கே.ராமலிங்கம் ஆகிய 9 பேர் கரோனா தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

முகக்கவசம் கட்டாயம்

சென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மருத்துவ சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்த சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும்போது, “சென்னை மாநகர பகுதியில் அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என இதுவரை 72 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பிரத்தியேக இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இது 85 ஆயிரம் வரை உயரக்கூடும்.

அடுத்த 10 நாட்களுக்குள் 2-ம் கட்டமாக மாநகராட்சி முன்கள பணியாளர்கள், போலீஸார், மாநகராட்சி சுகாதார மற்றும் தூய்மை ஆய்வாளர்கள், ஊடகத் துறையினர் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. 3-ம் கட்டமாக முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு போடப்படும். ஒருமுறை போட்டுக்கொண்டால் 28 நாட்கள் கழித்து மீண்டும் 2-வது ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது முதற்கட்டமாக 12 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதன் மூலம் தொற்று பரவல் படிப்படியாக குறையும். தடுப்பூசி போடும் காலம் வரும் வரை, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x