

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் மாநில அரசு போக்குவரத்து கழகதொழிலாளர்கள் சங்கம் (எஸ்விஎஸ்-ஏஏபி), தேசிய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் உட்பட 11 தொழிற்சங்கங்கள் இணைந்து அரசு போக்குவரத்து சேவை பாதுகாப்பு கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு சார்பாக பொது கோரிக்கைகள் உருவாக்கப்பட்டு, வரும் பேச்சுவார்த்தையில் நிறைவேற்றிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த கூட்டமைப்பு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய ஒப்பந்தம் குறித்துகடந்த 5-ம் தேதியில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 67 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
போக்குவரத்து கழகங்களை அரசு துறையோடு இணைக்க வேண்டும், தொழிலாளர்களின் தற்போதைய சலுகைகள், உரிமைகளைப் பாதுகாக்க, சம்பளம் நிலை குறித்த தொழிற்சங்கங்களின் கருத்தை அறிந்து பேசி முடிக்கவேண்டும், ஓய்வூதியம் வழங்கும்பொறுப்பை அரசே ஏற்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 7 கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.