Published : 29 Oct 2015 03:39 PM
Last Updated : 29 Oct 2015 03:39 PM

வேல்முருகன் மீது காவல்துறை தாக்குதல்: சீமான் கண்டனம்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் பன்னாட்டு நிறுவனமான கோக - கோலா நிறுவனம் சவுத் இந்தியா பாட்டிலிங் கம்பெனி (South India Bottling Company Pvt Ltd.) என்ற பெயரில் கோக கோலா குளிர்பானத்தை உற்பத்தி செய்து வருகிறது.

2006-ல் தொடங்கிய இந்த நிறுவனம் குளிர்பானத்தை உற்பத்தி செய்ய ஒருநாளைக்கு 90,000 லிட்டர் தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து உறிஞ்சி வருகிறது. இந்நிலையில் சென்றவருடம் இதே நிறுவனம் அதன் பிளாஸ்டிக் உற்பத்தியை விரிவுபடுத்த அரசிடம் அனுமதி கோரியது.

அதன்படி இனி ஒருநாளைக்கு 1,80,000 லிட்டர் உறிஞ்சப்படும் என்றும், ஆயிரம் லிட்டர் 13.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொள்ளவும் கணக்கிடப்பட்டு தாமிரபரணி ஆறு பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமான தாமிரபரணி நீரை நம்பியிருக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களின் விவசாயமும் வாழ்வியலும் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் குடிநீர் பற்றாக்குறையில் திண்டாடும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால், இதனை எதிர்த்து தமிழக மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.

குறைந்தபட்சம் மக்கள் கருத்தை அறியும் கூட்டத்தையாவது நடத்த கூட மறுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அரசின் சிப்காட் நிறுவனமும் கோக - கோலா நிறுவனத்தின் விரிவுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் இன்னொரு பன்னாட்டு நிறுவனமான பெப்சியும் ஆலை அமைத்து தாமிரபரணி ஆற்றை உறிஞ்சி அதன் உற்பத்தியை தொடங்கியிருக்கிறது. அதிலும் ஒரு லிட்டர் வெறும் 35 காசுகளுக்கு விற்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது,

நீரை உறிஞ்சி மண்ணை தரிசாக்கி மக்களை குடிநீருக்கு அல்லாடவைக்கப்போகும் இந்த பன்னாட்டு நிறுவன ஆலைகளை எதிர்த்து அனைத்து தரப்பு மக்களும், அம்மக்கள் மேல் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.

இந்நிலையில் ஜனநாயக ரீதியில் இந்த மாபெரும் கொள்ளையை எதிர்த்து போராட்டம் அறிவித்து அந்த ஆலைகளை முற்றுகையிட முயன்ற வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது மிகவும் கண்டிக்ககத்தக்கது.

மக்களுக்காக போராடுகின்ற அமைப்புகளை பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக காவல்துறையை கொண்டு அரசு தாக்குதல் நடத்தி ஒடுக்க முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உத்தரபிரதேசம் வாரணாசியில் இதை போலவே அங்கு நிறுவப்பட்ட கோக - கோலா நிறுவனம் தங்கள் குடிநீரை உறிஞ்சுவதாக அங்கு வசிக்கும் மக்கள் எதிர்த்து போராடியதையடுத்து உத்திரபிரதேச அரசு அந்நிறுவனத்தை மூடியது. ஆனால் இங்கோ போராட முயல்கின்ற அமைப்புகளையும்,கட்சிகளையும் காவல்துறை கொண்டு தாக்குதல் நடத்தி வீழ்த்த முயல்கிறார்கள்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி உள்ளிட்ட பலர் காவல் துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார்கள். மக்களை பாதுக்காக்க காவல்துறை என்ற நிலை மாறி, பன்னாட்டு முதலாளிகளையும், அவர்களது தொழில்களையும் பாதுகாக்கிற ஏவல்துறையாக மாறி இருப்பது ஜனநாயக நாட்டில் தான் நாமெல்லாம் வாழ்கிறோமா என்ற சிந்தனையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது கொடுந்தாக்குதல் நடத்திய தமிழக காவல்துறையினரை வன்மையாக கண்டிப்பதோடு, இதில் தொடர்புடைய காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என சீமான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x