

ஓசூர் அருகே தேசிய நெடுஞ் சாலையைக் கடக்க முயன்ற 40 வயது ஆண் யானை, கன்டெய்னர் லாரி மோதியதில் படுகாய மடைந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிந்து வந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த யானை நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் பேரண்டப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முயன்றது. அப்போது பெங்களூரு நகரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, யானையின் மீது மோதியது. இதில், யானை படுகாயமடைந்து சாலையில் விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வன விலங்குகள் மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர், காயம டைந்த யானைக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர், மாவட்ட வன அலுவலர் பிரபு ஆலோசனையின் பேரில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், படுகாயமடைந்த யானையை மீட்டு அய்யூர் காப்புக்காட்டுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறும்போது, ‘‘அய்யூர் காப்புக்காடு சாமி ஏரி அருகே காயமடைந்த ஆண் யானைக்கு மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுடன் பெங்களூரு வனவிலங்குகள் மருத்துவ நிபுணர் அருண் சஹா தலைமையிலான குழுவினரும் இணைந்துள்ளனர். காயமடைந்த யானைக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆண் யானையின் பின்பக்க வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், யானையால் எழுந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறது. கால் எலும்பு முறிவை சரி செய்வதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மேற் கொண்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விபத்து குறித்து ஓசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். யானை மீது மோதிய கன்டெய்னர் லாரியின் ஓட்டுநரும் படுகாயமடைந்துள்ளதால், அவரை போலீஸார் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள் ளனர். ஓட்டுநருக்கு உடல் நிலை தேறிய பின்னரே விபத்து குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.