Published : 16 Jan 2021 10:30 PM
Last Updated : 16 Jan 2021 10:30 PM

வைகையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே மதுரையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை கோரும் பொதுமக்கள்

வைகை ஆற்றில் தற்போதே தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்லும் நிலையில் வைகை அணையில் இருந்து மேலும் தண்ணீர் திறக்கப்பட்டால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஆறு குறுகலாக்கப்பட்ட மதுரையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு நகரப்பகுதியில் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்புள்ளது.

அதனால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரியார் நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு ஒரளவு நல்ல மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

அதுபோல் வைகை நீர்பிடிப்பு பகுதியிலும் வடகிழக்கு பருவமழை பெய்ததால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து. அதனால், வைகை அணை நீர் மட்டம் 69 அடியை கடந்துவிட்டது.

ஏற்கெனவே இடைவிடாத மழையால் வைகை அணையில் விநாடிக்கு 319 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் மழைநீரும், அணையில் திறந்துவிடப்பட்ட நீரும் சேர்ந்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், இரு முறை வைகை ஆறு கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது அணை நீர் மட்டம் மேலும் அதிகரித்து வருவதால் மூன்றாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் வைகை அணையில் இருந்து எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கும் அபாயம் உள்ளது.

ஆனால், தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மேலும் அணையில் தண்ணீர் திறக்கும்பட்சத்தில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படி வெள்ளம் ஏற்பட்டால் ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டியின் நான்கு வழிச்சாலை மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர் போன்ற வளர்ச்சி திட்டத்தால் மதுரையில் குறுலாக்கப்பட்ட ஆற்றில் தண்ணீர் ஆற்றைக் கடந்து வெளியே தண்ணீர் வரவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே 90களில் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வெளியே மதுரை கோரிப்பாளையம், செல்லூர் பகுதியில் புகுந்த வரலாறு உள்ளது. அப்போது நெசவு தொழிற்பேட்டைகள் அழிந்தன. குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இவ்வளவுக்கும் அப்போது தற்போது போல் வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இல்லை. ஆறும் விசாலகமாகவே இருந்தது. அதுபோன்ற நிலைமை தற்போது ஏற்படாமல் இருக்க மதுரை மாவட்ட நிர்வாகம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது வைகை கரையோரப்பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இரவு நேரத்தில் வெள்ளம் ஏற்படும்பட்சத்தில் அது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

அதனால், குறுகலான மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் வந்தால் தண்ணீரை எப்படி நகருக்கு புகாமல் அப்படியே அதன் போக்கிலே அனுப்புவது என்பது குறித்து மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் ஆலோசனை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மதுரை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x