

பூலாம்வலசு சேவற்கட்டில் சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி பட்டுக் காயமடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசு சேவற்கட்டு மிக பிரபலம். 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நடந்த சேவற்கட்டின்போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி பட்டு இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து சேவற்கட்டு 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது.
அதன்பின் 2019-ம் ஆண்டு நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று பல்வேறு கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சேவற்கட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டும் சேவற்கட்டு நடைபெற்றது. பூலாம்வலசு சேவற்கட்டு நிகழாண்டு கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்டு கடந்த 13-ம் தேதி சேவற்கட்டு தொடங்கியது.
சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது என்ற போதிலும் விதிகளை மீறி சேவல் காலில் கத்தி கட்டி சண்டைக்கு விடப்பட்டன. ஆடுகளத்தினுள் கத்தி விற்பனை, கத்தி சாணை தீட்டுதல் போன்றவை நடைபெற்றன. முதல் நாள் கத்தி பட்டு 9 பேர் காயமடைந்தனர். 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மழை காரணமாக 2-வது நாளான கடந்த 14-ம் தேதி சேவற்கட்டு ரத்து செய்யப்பட்டது. நேற்று நடந்த சேவற்கட்டில் சேவல் காலில் கத்தி கட்டி சண்டைக்கு விடப்பட்டதில் 34 பேர் காயமடைந்தனர். போலீஸார் 5 வழக்குகள் பதிவு செய்து 10 பேரைக் கைது செய்தனர்.
சேவற்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட 3 நாள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 14-ம் தேதி போட்டி ரத்து செய்யப்பட்டதால், 3-ம் நாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 7,000க்கும் மேற்பட்ட சேவல்கள் களமிறக்கப்பட்டன. விதிகளை மீறி சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி பட்டு 27 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (65). அவரது சேவலைப் போட்டியில் மோதவிட்டபோது, சேவல் பறந்தது. அப்போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி தங்கவேல் தொடையில் பட்டதில் படுகாயமடைந்தார். இதையடுத்து கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கவேல் உயிரிழந்ததை அடுத்து சேவற்கட்டு நிறுத்தப்பட்டது. சேவற்கட்டில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.