

ஆவலுடன் எதிர்பார்க்கப்பபட்ட உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று ஆரவாரமாக நடந்தது. இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்த முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறந்த வீரர், காளைக்கு கார்களைப் பரிசாக வழங்கினர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக நடக்கும் உலக புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி இன்று நடந்தது.
மதுரை மட்டுமில்லாது, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. மொத்தம் இந்தப் போட்டியில் 700 காளைகளும், 655 மாடுபிடி வீரர்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு போட்டியில் பங்கேற்றனர்.
சிறப்புச் சட்டம், ஒழுங்கு டிஜிபி தமிழக ராஜேஸ்தாஸ், தென்மண்டல ஐஜி முருகன் டிஐஜி ராஜேந்திரன் மேற்பார்வையில் மதுரை எஸ்பி சுஜித்குமார், நெல்லை எஸ்பி மணிவண்ணன், மதுவிலக்கு பிரிவு எஸ்பி ராஜாராமன் தலைமையில் மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 8 மணிக்கு முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அவர்கள் வழிநெடுக அதிமுகவினர் வழங்கிய வரவேற்பால் 8.40 மணிக்கே அலங்காநல்லூர் வந்தனர். மாடுபிடி வீரர்கள், ஆட்சியர் அன்பழகன் கூறியபடி, ‘காளைகளை துன்புறுத்தமாட்டோம், அரசு அறிவுறுத்திய விதிமுறைகளை பின்பற்றுவோம், ’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதன்பிறகு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடியைசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், எம்எல்ஏ-க்கள் விவி.ராஜன் செல்லப்பா, மாணிக்கம், நீதிபதி, ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ஆர்.ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 45 நிமிடங்கள் வரை முதல்வரும், துணை முதல்வரும் போட்டியை ரசித்துப் பார்த்தனர். அவ்வப்போது வீரர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் சார்பில் தங்கக் காசுகளும், ரொக்கப்பணப்பரிசும் விழாக்குழுவினரால் அறிவிக்கப்பட்டன.
வாடிவாசலில் முதல் காளையாக அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. அதன்பின் வீரர்கள் அடக்குவதற்கு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை அவிழ்த்துவிடப்பட்டது.
அந்தக் காளையை அடக்கினால் தங்கக்காசு, ரொக்கப்பரிசுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், மாடுபிடி வீரர்களால் அங்கு நெருங்க முடியவில்லை. காளை பிடிபடாமல் சென்றது. உடனே விழாக்குழு சார்பில் சிறப்புப் பரிசுகள் அமைச்சர் விஜயபாஸ்கர் காளைக்கு வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுப்பேரவை தலைவர் பி.ஆர்.ராஜசேகர் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அந்தக் காளையும் பிடிபடால் மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் மிரள வைத்தது.
இன்று போட்டியில் மொத்தம் 30 வீரர்கள் காளைகள் முட்டி காயமடைந்தனர். அவர்களுக்கு அலங்காநல்லூர் மருத்துவமனை மருத்துவக்குழு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒவ்வொரு சுற்றிலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் விழாக்குழு சார்பில் பைக், தங்கக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், பட்டுச் சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டி முடிவில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்வர் கே.பழனிசாமி சார்பில் காரும், சிறந்த காளைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் காரும் வழங்கப்பட்டன.