

வடகிழக்குப் பருவமழை ஜன.19-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
ஜனவரி 17 அன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜனவரி 18, ஜனவரி 19, ஜனவரி 20 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸையும் ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக குடவாசலில் (திருவாரூர்) 5 செ.மீ., ராமநாதபுரத்தில் 4 செ.மீ., மஞ்சளாறு (தஞ்சாவூர்) வேதாரண்யம் (நாகப்பட்டினம்) அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) வலங்கைமான் (திருவாரூர்) ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ., வைப்பார் (தூத்துக்குடி), சூரக்குடி (தூத்துக்குடி), கும்பகோணம், காட்டுமன்னார் கோவில் (கடலூர்) தொண்டி (ராமநாதபுரம்), புள்ளம்பாடி (திருச்சி) ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
குறிப்பு: வடகிழக்குப் பருவமழையானது தென்மாநிலங்களில் இருந்து வருகின்ற 19-ம் தேதி விலகுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.