

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையின் அனைத்துப் பக்கங்களிலும் நள்ளிரவு முதல் தடுப்பு அமைத்து போலீஸார் கண்காணிப்பதால் மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.
கரோனா வைரஸ், உருமாற்றமடைந்த கரோனாவாக இங்கிலாந்தில் பரவியதை அடுத்து கரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழகத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் சுற்றுலாத் தளங்கள், கடற்கரையில் பொதுமக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்கா, மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. பொங்கல் பண்டிகை, விடுமுறை நாட்கள் என்பதால் வண்டலூர் உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூட வாய்ப்புகள் உள்ளதால் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டு பொதுமக்களுக்குக் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று தடுக்கும் விதமாக முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்களைத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
காணும் பொங்கலுக்குச் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முதல் காந்தி சிலை வரை லட்சக்கணக்கில் பொதுமக்கள் கூடுவார்கள். இது தவிர பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், ஈசிஆர் சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களில் அதிக அளவில் வருவார்கள். இதனால் நேற்று நள்ளிரவிலேயே சாலைத் தடுப்புகள் அமைத்துக் கடற்கரைக்குள் நுழையும் சாலை முற்றிலும் மூடப்பட்டது.
சென்னையில் காணும் பொங்கலையொட்டி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் தடை காரணமாக சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, காந்தி சிலை வரை கடற்கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. தடையை மீறி வந்தவர்களையும் போலீஸார் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர்.