Last Updated : 16 Jan, 2021 04:14 PM

 

Published : 16 Jan 2021 04:14 PM
Last Updated : 16 Jan 2021 04:14 PM

கரோனா தடுப்பூசியைக் கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம்

கரோனா தடுப்பூசி மருந்துகள் பல கட்ட ஆய்வுக்குப் பிறகே பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

கரோனா நோய் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் போடும் முகாம் நாடு முழுவதும் இன்று தொடங்கியது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 27,200 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 4 இடங்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 இடங்கள் என மொத்தம் 12 இடங்களில் 1,200 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்கு இன்று செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி முகாமைத் தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவர் திலீபன் கரோனா தடுப்பூசி மருந்தை முதலில் போட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:

''ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கரோனா தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக இன்று செலுத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி மருந்து செலுத்தப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 4,184 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இதற்கான 4,700 டோஸ் மருந்துகள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்கள் 28 நாட்கள் கழித்து 2-ம் கட்டமாக தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு மையத்திலும் 100 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும். தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து போடப்படும்.

உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகள், தலைசிறந்த மருத்துவர்களின் பல கட்ட ஆய்வுக்குப் பிறகு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஒவ்வொரு கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் என அனைவருக்கும் அரசு சார்பில் இலவசமாக கரோனா தடுப்பூசி மருந்துகள் போடப்படும்.

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 மையங்களில் கரோனா தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்வோருக்குப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும்''.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் நிகழ்ச்சியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவர்கள் செல்வகுமார், சுமதி, பிரபாகரன், சிவக்குமார், திருப்பதி, சிவாஜி, மணிகண்டன், சதாசிவம், சுபான், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டி.டி.குமார், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டீன் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுக்காவுக்கு உட்பட்ட புன்னை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி மருந்து போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x