

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மூச்சுத் திணறல் காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
திமுக சார்பில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடியில் உள்ள தனது வீட்டில் கடந்த சில நாட்களாகத் தங்கியுள்ளார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களை அவர் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காட்பாடி காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் துரைமுருகன் கலந்துகொண்டு திமுக கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். காலை 8 மணி முதல் பகல் 2.30 மணி வரை அவர் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியால் அவர் சோர்வடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காட்பாடி காந்தி நகரில் வீட்டில் இருந்த துரைமுருகனுக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இருதய சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருதய சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
இதுகுறித்து சிஎம்சி மருத்துவர்கள் கூறும்போது, ‘‘திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வாயுக்கோளாறு உள்ளது. சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல் நிலை சீரானது. இயல்பு நிலைக்கு துரைமுருகன் திரும்பியதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்’’ என்றனர்.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ''பொதுச் செயலாளருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, வாயுக்கோளாறு காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தார். பிறகு உடல் நிலை சீரானாதைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார். சிறிது நேரம் ஓய்வுக்குப் பிறகு அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்'' என்றனர்.