Published : 16 Jan 2021 12:52 pm

Updated : 16 Jan 2021 13:08 pm

 

Published : 16 Jan 2021 12:52 PM
Last Updated : 16 Jan 2021 01:08 PM

துக்ளக் விழாவில் குருமூர்த்தியின் பேச்சு; நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் செயல்: திமுக கண்டனம்

gurumurthy-s-speech-thuklak-ceremony-act-that-tarnishes-the-indian-judiciary-dmk-condemnation

சென்னை

ஒருபக்கம், பாஜகவுடன் கூட்டு என்று தமிழக முதல்வர் கூறிக்கொண்டிருக்கிறார், ஆனால், குருமூர்த்தியோ, பாஜகவின் தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியில், அதிமுக கூட்டுக் கொள்ளை நடத்திக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசுகிறார், அதை அதிமுக அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது என திமுக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் இன்று விடுத்துள்ள அறிக்கை:


சென்னையில் ஜன.14 அன்று நடத்தப்பட்ட துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில், தற்போது துக்ளக் இதழை நடத்தும் பொறுப்பில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி, வசைமாரிப் பேச்சை வாரி வழங்கியிருக்கிறார்.

பட்டயக்கணக்காளரான குருமூர்த்தி, பொருளாதார அறிஞராக முன்னிறுத்தப்படுவதும், அதன் அடிப்படையில் அவர், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் இயக்குநராக்கப்பட்டதும் அத்துறை சார்ந்த அறிஞர்களால் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர் இப்போது நீதித் துறை குறித்தும் கருத்துச் சொல்லியிருக்கிறார். சட்டத் துறையோடு எந்தத் தொடர்பும் இல்லாத அவர், சாஸ்த்ரா சட்டப் பள்ளியின் ஆய்விருக்கைப் பேராசிரியராக நியமனம் பெற்றிருக்கிறார். 2017-ல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் புதிய வழக்குரைஞர்கள் உறுதியேற்பு விழாவிலும்கூட அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தனியார் பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கௌரவ வாய்ப்புகளாலும், பார் கவுன்சில் தன்னை அங்கீகரித்ததாலும், அவர் தன்னை தற்போது சட்ட அறிஞராகவும் வெளிக் காட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். பார் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. வழக்கறிஞர்களால் அது உரிய முறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் போய்விட்டது.

இப்போது, நீதிபதிகள் நியமனத்தையே அவர் கேலிக்குரிய ஒன்றாகச் சித்தரித்திருக்கிறார். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று குருமூர்த்தி பேசியிருப்பது, இந்திய நீதித் துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு.

நீதிபதிகளின் நியமனத்தில் மத்திய - மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டாலும், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே இறுதி முடிவு எடுக்கிறது என்பதை அனைவரும் அறிவர். சட்டமியற்றும் அமைப்பு, நிர்வாக அமைப்பு, நீதித் துறை என்று அரசின் ஒவ்வொரு அங்கத்துக்கும் இடையிலான அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு இதற்கு அடிப்படையாக இருக்கிறது.

சட்டம் படித்தவர்கள் என்றால் இந்த அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்கும். ஆடிட்டர் ஒருவருக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உச்சநீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் அரசமைப்புச் சட்டமே தகுதியை நிர்ணயித்திருக்கிறது. அதன்படிதான், நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். குருமூர்த்தி, அரசமைப்புச் சட்டத்தையும் தாண்டி தகுதி என்று எதைச் சொல்ல வருகிறார்?

ஒருபக்கம், பாஜகவுடன் கூட்டு என்று தமிழக முதல்வர்கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், குருமூர்த்தியோ, பாஜகவின் தலைவர் ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியில், அதிமுக கூட்டுக்கொள்ளை நடத்திக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசுகிறார். அதை அதிமுக அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

திமுகவை எதிர்ப்பதற்காக, சசிகலாவையும் ஆதரிப்போம் என்று சொல்லி, நெருப்பை அணைக்க சாக்கடையையும் அள்ளித் தெளிப்போம் என்று, சசிகலாவைச் சாக்கடையுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

இத்தகைய அநாகரிகமான, அவதூறான பேச்சுகளை அதிமுக இதுவரை கண்டிக்காதிருப்பதைப் பார்த்தால், அக்கட்சியின் கூட்டுக் கொள்ளையையும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரையும் பற்றி குருமூர்த்தி பேசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத்தான் பொருள்கொள்ள வேண்டியிருக்கும்”.

இவ்வாறு சண்முகசுந்தரம் விமர்சித்துள்ளார்.


தவறவிடாதீர்!

GurumurthySpeechThuklak ceremonyActTarnishesIndian judiciaryDMKCondemnationதுக்ளக் விழாகுருமூர்த்திபேச்சுஇந்திய நீதித்துறைகளங்கம் விளைவிக்கும் செயல்திமுககண்டனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x