Published : 16 Jan 2021 11:13 AM
Last Updated : 16 Jan 2021 11:13 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதம் அடைந்துள்ள நிலையிலும் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழ் ஆண்டு ஜனவரி மாதத்தில் கடந்த 2 வாரங்களில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2011-ல் 14 மில்லி மீட்டரும், 2012-ல் 2, 2013-ல் 25, 2014-ல் 5, 2015-ல் 2, 2017-ல் 59, 2018, 2020-ல் தலா 4 மற்றும் 2016 மற்றும் 2019-ல் மழை பெய்யவில்லை.
இந்நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக அறுவடை தொடங்கி விடும். அதற்கேற்ப நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்யப்படும்.
ஆனால், கடந்த 2 வாரங்களாகவே தொடர் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் மொத்த நெல் சாகுபடி பரப்பளவான 2 லட்சம் ஏக்கரில் சுமார் 75,000 ஏக்கரில் அறுவடை செய்ய முடியாமல் கதிர்கள் சாய்ந்தும் அழுகியும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 25,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மக்காசோளம், உளுந்து, பயறு, எள் போன்ற பயிர்களும் மழையின் காரணமாக முழுமையாகவே அழுகிவிட்டன. எனவே, சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உடனே நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் சி.ரங்கராஜன் கூறியது:
மழையினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பலவிதமான பயிர்கள் அழுகி பாதிக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை கூட்டாக சென்று கணக்கெடுத்து, விவசாயிகளின் ஆதார் எண், வங்கிக் கணக்கு போன்ற விவரங்களுடன் ஜனவரி 29-ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு 13-ம் தேதி அறிவித்துள்ளது.
ஆனால், இதைப்பற்றி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் எந்த அறிவிப்பையும் கொடுக்கவில்லை. ஆட்சியரும் பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ததாகவும் தெரியவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரப்பூர்வமாக ஆட்சியர் அறிவிக்க வேண்டும்.
மேலும், சாகுபடி கணக்கின் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாகவே சாகுபடி பொய்த்துப்போனதால் அனைத்து விதமான கடன்களையும் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்றார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியது:
மாவட்டத்தில் ஒருபோகம் மட்டுமே அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யக்கூடிய சம்பா நெல் சாகுபடியும் முழுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது.
இதனால், வைக்கோலுக்கும் தட்டுப்பாடும் ஏற்படும் என்பதால் கால்நடைகளையும் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும். இதுதவிர, காப்பீடு செய்தோருக்கு இழப்பீடு தனியாக வழங்க வேண்டும். மழையினால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டு உள்ளோருக்கு தாமதமின்றி உதவி செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT