Published : 16 Jan 2021 10:10 AM
Last Updated : 16 Jan 2021 10:10 AM

கரோனா தடுப்பூசி.. என் கேள்விக்கு என்ன பதில்?- சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதிலளிக்கிறார்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்குகிறது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்கள், கேள்விகளுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விரிவாகவும், விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார். அதன் விவரம்:

தற்போது யார் யாருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது?

கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி வழங்கப்படுகிறது. கோ-வின் செயலியில் பதிவு செய்துள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கும், அடுத்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். 2-வது கட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு குறைவாக இருந்து உயர் ரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு நோய் போன்ற கூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும். இப்போதைக்கு பொதுமக்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியாது. மத்திய அரசு அறிவித்த பிறகு, பொதுமக்கள் இணையத்தில் பதிவு செய்யலாம்.

பல தடுப்பூசிகள் கிடைக்கக்கூடிய நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டும் ஏன் தேர்வு செய்யப்பட்டுள்ளது? இவை மற்ற நாடுகளில் உள்ளதுபோலவே செயல்திறன் மிக்கதுதானா?

ஆம். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் அறிக்கை, மருந்து சீராக்கும் அமைப்பால் பரிசோதிக்கப்பட்ட பிறகே உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, மற்ற வளர்ந்த நாடுகளைப் போலவே இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும். முழுமையாக ஒரே வகையான தடுப்பூசியை மட்டுமே போடவேண்டும். பிறவகை தடுப்பூசிகளை மாற்றி போடக் கூடாது.

கரோனா தடுப்பு மருந்தை +2 முதல் +8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்து, தேவையான வெப்பநிலையில் மருத்துவ நிலையங்களில் தயார்படுத்தி முகாமுக்கு கொண்டு செல்லும் திறன் இந்தியாவில் உள்ளதா?

இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. உலகிலேயே மிகப் பெரிய அளவில் கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மிகப் பெரிய அளவிலும், பல்வேறுபட்ட மக்களை சென்றடையும் வகையிலும் நிர்வகிக்கப்பட்டு மிக சிறப்பான முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமா?

சுயவிருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும். இருப்பினும், ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், நோய் பரவலை கட்டுப்படுத்தவும் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. ஏற்கெனவே கரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் வலுப்படுத்தும். புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் அதிக ஆபத்து உள்ளவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். அதேநேரம், நோய்த் தொற்று உடையவர்கள், அறிகுறிகளில் இருந்து விடுபட்ட 14 நாட்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தடுப்பூசி முகாமுக்கு வருவதால் மற்றவர்களுக்கு இந்த தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும்.

தடுப்பூசிக்கு பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?

ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு), பாஸ்போர்ட், பணியாளர் அடையாள அட்டை, ஓய்வூதிய ஆவணம், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, வங்கி, தபால் அலுவலக கணக்குப் புத்தகங்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்று கட்டாயம். தடுப்பூசி பதிவுக்கும், தடுப்பூசி முகாமில் விவரங்கள் சரிபார்க்கவும், சரியான நபருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டது என்பதை உறுதி செய்யவும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் தேவை.

பதிவு செய்யாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியுமா?

முடியாது. கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்தல் கட்டாயம். பதிவுசெய்த பிறகே, தடுப்பூசி போடப்படும் மையம், நேரம் பற்றிய தகவல்கள் சுகாதார மையத்தில் இருந்து பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட இடைவெளியில் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்ட பிறகு, அவர்களது செல்போன் எண்ணுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

தடுப்பூசி முகாமுக்கு வருபவர்கள் என்ன முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்?

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு குறைந்தது அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்து இருக்க வேண்டும். ஏதேனும் அசவுகரியமாகவோ, சங்கடமாகவோ உணர்ந்தால், அருகில் உள்ள சுகாதார அலுவலர்கள், செவிலியர்கள், ‘ஆஷா’ தன்னார்வலர்களிடம் அதுபற்றி கூற வேண்டும். முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி பாதுகாப்பானதுதானா? இதனால் எதிர்மறை விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்பால் அதன் பாதுகாப்பு, செயல்திறன் உறுதி செய்த பிறகே கரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, முழுமையாக பாதுகாப்பானதே. அதேநேரம், மற்ற தடுப்பூசிகள் போலவே, கரோனா தடுப்பூசியாலும் சிலருக்கு லேசான காய்ச்சல், வலி போன்ற பொதுவான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படி ஏதேனும் ஏற்பட்டாலும், உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயாராகவே உள்ளனர்.

கரோனா தடுப்பூசி எத்தனை தவணை, எவ்வளவு கால இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும்?

28 நாட்கள் இடைவெளியில் 2 தவணையாக போட்டுக்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தி (Antibody) எப்போது உருவாகும்?

2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 வாரங்களுக்கு பிறகு, பாதுகாக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள முடியுமா?

தற்போது முன்னுரிமை அடிப்படையில் போடப்படுவதால், தமிழகத்தில் 160-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் சென்னையில் 2 தனியார் மருத்துவமனைகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மற்ற தடுப்பூசிகள் போல அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டணம் செலுத்த வேண்டுமா?

முதல்வர் அறிவித்துள்ளபடி, தமிழகத்தில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும்?

இந்த ஆண்டு இறுதிக்குள் 1.6 கோடி பேருக்கு (20 சதவீதம்) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x