Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

அதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது; திமுகவை தோற்கடிக்க சசிகலாவையும் ஏற்க வேண்டும்: ‘துக்ளக்' ஆண்டு விழாவில் எஸ்.குருமூர்த்தி கருத்து

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க சசிகலாவையும் ஏற்க வேண்டிய நிலை வரும் என்று ‘துக்ளக்' வார இதழ் ஆசிரியர்எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

‘துக்ளக்' வார இதழின் 51-வதுஆண்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து குருமூர்த்தி பேசியதாவது:

கடந்த 1987-88-ல் போபர்ஸ் ஊழல் வெளிவந்தபோது அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியைபதவியைவிட்டு அகற்ற ‘இந்தியன்எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா பெரும்முயற்சி எடுத்தார். அதற்காக பெரும்கஷ்டங்களை எதிர்கொண்டார். பத்திரிகையாளர் அருண் ஷோரியும், நானும், கோயங்காவுக்கு துணையாக இருந்தோம். எங்களுக்கு உதவியவர்களில் ஒருவர் சந்திராசாமி. அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் இருந்தன.

‘தூய்மையான அரசியல் வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராடும் நீங்கள் சந்திராசாமியோடு இணைந்து செயல்படுவது எப்படி சரியாகும்’ என்று அருண் ஷோரியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,‘வீடு பற்றி எரியும்போது கங்கை நீருக்காக காத்திருக்க முடியாது. சாக்கடை நீரையும் வாரி வீசுவோம்’ என்று பதிலளித்தார்.

யாரை வைத்து திமுகவை தோற்கடிப்பது என்பதற்கு அருண் ஷோரிகூறிய இந்த பதிலையே கூற விரும்புகிறேன். சசிகலாவாக இருந்தாலும்,யாராக இருந்தாலும் திமுகவுக்கு எதிராக ஒரு அணி உருவாகும்போது கங்கை நீருக்காக மட்டும் காத்திருக்க முடியாது. எல்லா நீரையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.

திமுக இன்று குடும்ப கட்சியாகமாறிவிட்டது. அதிமுக இல்லையென்றால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது. இந்து மதத்தின் மீது வெறுப்புஉணர்வு குறைந்திருக்காது.

1989 முதல் 2014 வரை மத்தியில்இருந்த கூட்டணி அரசுகள் ஏதாவதுஒரு திராவிடக் கட்சியை சார்ந்திருந்ததால் தமிழகத்தில் தேசியக் கட்சிகளால் வளர முடியவில்லை. 2014-ல்மத்தியில் நிலைமை மாறினாலும் தமிழகத்தில் மாறவில்லை.

ஆளுமை மிக்க தலைவர்கள் மறைந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி, கட்சியை முதல்வர் பழனிசாமி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் அவருக்கு ஆளுமை திறன் இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.ஆனால், இரு கட்சிகளுக்கும் மக்களை ஈர்க்கும் தலைமை இல்லை.

தமிழ் சமுதாயத்துக்கும், தமிழ்அரசியலுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியை தேசியக் கட்சிகளால் மட்டுமே நிரப்ப முடியும். தேசிய எண்ணம் கொண்ட கட்சியாகவே காங்கிரஸை பார்க்க முடியவில்லை. 5, 6 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக வளர வாய்ப்புள்ளது.

அதிமுக, திமுக இரண்டும் ஊழல்கட்சிகள். ஆனால், அதிமுக தேசியவாதத்தை ஏற்கும் கட்சி. திமுக தேசியவாதத்தை ஏற்பதில்லை. திமுக குடும்ப கட்சி. நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரிவினையை ஆதரிக்கும் கட்சி திமுக. திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம், ரவுடியிசம் அதிகமாக இருக்கும். அதிமுகஅணியில் பாஜக இருக்கப் போவது முக்கியமான விஷயம். திமுகவை கண்டிப்பாக தோற்கடிக்கவேண்டும். எனவே, அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பதை தவிர இந்தத் தேர்தலில் வேறு வழியில்லை.

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ரஜினியை எதிர்பார்த்தோம். ஆனால், உடல்நிலை காரணமாக அவர் கட்சி தொடங்கவில்லை. அவரது இந்த முடிவை நாம் மதிக்க வேண்டும். இவ்வாறு எஸ்.குரு மூர்த்தி பேசினார்.

ட்விட்டரில் விளக்கம்

சசிகலா குறித்து குருமூர்த்தி பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில், அவர் தனது பேச்சுக்கு ட்விட்டரில் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘அமமுகவை இன்னமும் மன்னார்குடி மாஃபியாவாகத்தான் கருதுகிறேன். பாஜக - அதிமுககூட்டணியில் அமமுக இடம்பெற்றாலும் அவர்களை மாஃபியாக்களாக மட்டுமே கருதுவேன். மன்னார்குடி மாஃபியா மீண்டும் அதிமுகவுக்குள் வந்தால், திமுக போல அதிமுகவும் குடும்ப கட்சி ஆகிவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘சோ’விடம் இருந்து கற்ற துணிச்சல்

‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பேசிய ஜோகோ நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரி தர் வேம்பு, “நான் சென்னையில் பள்ளிப் முடிப்பை முடித்தேன். தமிழ் வழியில் படித்தேன். பாடப் புத்தகங்களைவிட ‘துக்ளக்’படிப்பதில்தான் ஆர்வம் அதிகம். சோவிடம் என்னை ஈர்த்தது அவரது துணிச்சல்தான். வணிகத்துக்கு துணிச்சல் மிகமிக முக்கியம். ஜோகோநிறுவனத்தை நடத்துவதில் துணிச்சல்தான் அடிப்படையாக இருக்கிறது. இப்போது நான் மைக்ரோசாப்ட், கூகுள் பற்றியெல்லாம் பயப்படுவதில்லை. சீனா, ஜப்பானை பார்த்து பயப்பட வேண்டாம் என்று தொழில்நுட்பத் துறை வணிகத்தில் இருப்பவர்களிடம் கூறி வருகிறேன். இதற்கு சோவிடம் கற்றுக்கொண்ட துணிச்சலே காரணம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x