Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

நாடு முழுவதும் 3,006 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி பிரதமர் இன்று தொடங்கிவைக்கிறார்: மதுரை அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார்

புதுடெல்லி / சென்னை

நாட்டின் முதலாவது கரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். மதுரை ராஜாஜிஅரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இதன்காரணமாக வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்தது.

இதனிடையே, கரோனா வைரஸ்தடுப்பூசி தயாரிக்கும் பணிகள், பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தமிழகம் உட்படநாடு முழுவதும் 2 கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடும் பணிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி போடும் பணியை தொடங்குவது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, கணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன்பின், தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16-ம்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்குதொடங்கி வைக்கிறார். பின்னர், நாட்டு மக்களிடையே காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

முதல் நாளில் தடுப்பூசி போடப்படும் நபர்கள் குறித்த விவரங்கள் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள கோ-வின் என்ற பிரத்யேக செயலியில் வெளியிடப்படும். தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்காக சுகாதாரத் துறை உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்கள் தனித்தனியாக பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை.ஒவ்வொரு நாளிலும் யார், யாருக்கு தடுப்பூசி போடப்படும் என்ற விவரங்களை மாநில அரசுகள் தயாரிக்கும். அந்தப் பட்டியல் 2 நாட்களுக்கு முன்னதாகவே வெளியாகும்.

முதல் நாளான இன்று யார், யாருக்கெல்லாம் தடுப்பூசி போடப்படுகிறதுஎன்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜம்மு -காஷ்மீர், சத்தீஸ்கரில் தடுப்பூசி போடப்படும் நபர்களின் பட்டியல் வெளியாகவில்லை. அங்குள்ள சில இடங்களில் இன்டர்நெட் சேவை போதுமான அளவில் இல்லாததால் அந்த தகவல் முன்னதாக வெளியாகவில்லை. ஆனால்,தொடர்புடைய நபர்களுக்கு தடுப்பூசி போடாமல் விடப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதுதொடர்பான உத்தரவுகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் 1075என்ற ஹெல்ப்லைன் நம்பர் உருவாக்கப்பட்டுள்ளது. கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான விவரங்களை இந்த எண்ணில் கேட்டுப் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்..

கரோனா தடுப்பூசிகள், அந்தந்த மாநிலங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5 லட்சத்து 36,500 டோஸ் கோவிஷீல்டு, 20 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பு மருந்து வந்தது. இதில், 5 லட்சத்து 12,200 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து, 10 சுகாதார மண்டல சேமிப்பு கிடங்களுக்கு அனுப்பப்பட்டு, 45 சுகாதார மாவட்டங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 24,300 கோவிஷீல்டு மற்றும் 20 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பு மருந்துகள் சென்னையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (எம்எம்சி) உட்பட நாடு முழுவதும் 62 இடங்களில் நடக்கும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மதுரை ஆட்சியர் அன்பழகன், மருத்துவமனை டீன் சங்குமணி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு குறைவான கூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்பின்னர், மற்றவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு 28 நாட்கள் கால இடைவெளியில் 2 தவணைகளாக தடுப்பூசி போட வேண்டும்.

முதலில் கோ-வின் செயலியில் பதிவு செய்துள்ள 4.39 லட்சம் சுகாதாரப் பணியாளர்களில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 166 தடுப்பூசி போடும் மையங்களில் காத்திருப்போர் அறை, தடுப்பூசி செலுத்தப்படும் அறை, தடுப்பூசி செலுத்தியபின் பயனாளிகளை 30 நிமிடங்கள் கண்காணிக்கும் விதமாக கண்காணிக்கும் அறை, அவசரகால மருத்துவ சிகிச்சை வழங்கும் அறை போன்றவை தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x