

கார்கள், பைக்குகள், தங்கக் காசு, மோதிரம்உட்பட ரூ.2 கோடி பரிசு மழையுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடக்கிறது. இதை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, போட்டி நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும் நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்நிலையில் உலக பிரசித்திபெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. இதில் 700 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களுக்கும் பங்கேற்கின்றனர்.
மாடு பிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், அவர்களது உதவியாளர்கள் ஆகியோருக்கு சுகாதாரத் துறை சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் பைக், தங்கக் காசுகள், மோதிரம், டி.வி., பீரோ, மிக்ஸி, குக்கர், கேஸ் அடுப்பு, அண்டா, சேர், கட்டில், சைக்கிள் ஆகியவை உட்பட 500 வகையான பரிசுகள் ரூ.2 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் காளைக்கு மட்டுமின்றி வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் ஒவ்வொரு காளையின் உரிமையாளருக்கும் வேஷ்டி, துண்டு வழங்கி மரியாதை செய்யப்படும். களம் இறங்குவதற்கு முன்பே வாடிவாசலில் காளைகளுக்கு நிச்சயப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும் வாடிவாசலில் மாடுபிடி வீரர்களை ஓடவிட்டு நின்று விளையாடி மிரள வைக்கும் சிறந்த காளைக்கும் கார்கள் பரிசு வழங்கப்படும்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று காலை 8 மணி அளவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இதற்காக முதல்வர் பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் நேற்று இரவு மதுரைவந்தார். இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலை 7.20 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு 8 மணிக்கு அலங்காநல்லூர் வருகிறார். அங்கு அவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். அவர்கள் ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்கின்றனர்.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வருகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.