Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

சிறந்த வீரருக்கு கார் பரிசு; சிறந்த காளைக்கு கன்றுடன் பசு பரிசு: பார்வையாளரை பரவசப்படுத்திய பாலமேடு ஜல்லிக்கட்டு

மதுரை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் நேற்றுஜல்லிக்கட்டுப் போட்டி வழக்கமான உற்சாகத்துடன், விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், காளைகள் முட்டியதில் காவல் ஆய்வாளர் உட்பட 35 பேர் காயமடைந்தனர். 18 மாடுகளைப் பிடித்து முதலிடத்தைப் பிடித்த வீரர் கார்த்திக்குக்கு கார் பரிசாகவும் சிறந்த காளைக்கு கன்றுடன்கூடிய பசுவும் பரிசாக வழங்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 783காளைகள், 651 மாடு பிடி வீரர்கள்தேர்வு செய்யப்பட்டனர். போட்டிக்கு முன்பு மாடுபிடி வீரர்களும்,காளை உரிமையாளர்களும் சுகாதாரத் துறையினரால் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியைத் தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் அன்பழகன், எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா(மதுரை வடக்கு), மாணிக்கம் (சோழவந்தான்), மூர்த்தி (மதுரை கிழக்கு), கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் ராஜதிலகன், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ஆர்.ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தென் மண்டல ஐஜி முருகன்,டிஐஜி ராஜேந்திரன், மதுரைஎஸ்பி சுஜித்குமார் மேற்பார்வையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலில் பாலமேடு கிராமக் கோயில்களுக்குச் சொந்தமான காளைகள் அவிழ்க்கப்பட்டபோது அவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. அதன்பின் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளைப் பிடிக்கத் தொடங்கினர்.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகள், அதைவிட வேகமெடுத்து காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் என பாலமேடு ஜல்லிக்கட்டு அமர்க்களமாகத் தொடங்கியது. போட்டியில் 75 வீரர்கள் வீதம் ஒவ்வொரு சுற்றிலும் காளைகளை அடக்க களம்இறக்கப்பட்டனர். காளைகள் வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்தபோது அதனை மாடுபிடி வீரர்கள் பயமறியாமல் அதன் திமில்களைப் பிடித்து அடக்கினர்.

பிடிபடாத காளைக்கும், அடக்கிய வீரர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, மோதிரம், பீரோ, கட்டில், சைக்கிள், அண்டா, குக்கர்,மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டன.

வாடிவாசலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் தெய்வீக பாண்டியன் காயமடைந்தார். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்தனர். மொத்தம் 677 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 600 வீரர்கள் பங்கேற்றனர்.

முதல் பரிசாக பதினெட்டு மாடுகளைப் பிடித்த மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் (28) என்ற இளைஞருக்கு மாருதி வேகனார் கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் ஏற்கெனவே, கடந்த ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் 3-ம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (25) 17 மாடுகளைப் பிடித்து 2-ம் இடம் பிடித்தார்.

அலங்காநல்லூர் அருகேயுள்ள பி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (27) 10 மாடுகளைப் பிடித்து 3-ம் இடம் பிடித்தார். பாலமேடு யாதவா உறவின் முறைக்குச் சொந்தமான காளைமுதலிடம் பிடித்து சிறந்த காளையாக தேர்வானது.

இந்தக் காளைக்கு கன்றுடன்கூடிய நாட்டுப்பசு பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது காளைக்கு ஒரு பவுன் தங்கக்காசு வழங்கப்பட்டது.

3-ம் இடம் பிடித்த மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த வீரபாண்டியனின் காளைக்கு நினைவுக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x