Last Updated : 16 Jan, 2021 03:14 AM

 

Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

கோதவாடி குளத்துக்கு பிஏபி உபரி நீர் கிடைக்குமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு

மிகக் குறைந்த அளவு தண்ணீருடன் காணப்படும் கோதவாடி குளம்.

பொள்ளாச்சி

கோதவாடி குளத்துக்கு பிஏபி அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரை வழங்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த குருநல்லிபாளையம், வடசித்தூர், கொண்டம்பட்டி, கோதவாடி கிராமங்களுக்குட் பட்ட 312 ஏக்கர் பரப்பில் கோதவாடிகுளம் அமைந்துள்ளது. பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இந்தக் குளம் மழைநீரையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்த குளத்துக்கான நீர்வழித்தடங்கள் புதர்மண்டி தூர்ந்து போனதாலும், மழை இல்லாததாலும் குளம் நீரின்றி வறண்டுபோனது. எனவே,குளத்துக்கு நிரந்தர நீராதாரத்தை உருவாக்க வேண்டும் என்றும்,பிஏபி அணைகளின் உபரி நீரை குளத்துக்கு கொண்டுவரவேண்டுமென்றும் இப்பகுதி விவ சாயிகள் கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் களிடமும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தொடர் மழையால் பிஏபி தொகுப்பு அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீரை பிஏபி வாய்க்கால் வழியாககோதவாடி குளத்துக்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் கூறியதாவது:

கிணத்துக்கடவு பகுதியில் மழைக்காலத்தில் உருவாகும் சிற்றாறுகளின் நடுவே கட்டப் பட்டுள்ள தடுப்பணைகள் மழைநீர் வீணாவதைத் தடுக்கின்றன. எனினும், மழைக்காலம் முடிந்தவுடன் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது. கோதவாடி குளத்தின் நீர்வழித்தடங்களைச் சீரமைத்து, புதிய நீராதாரங்களை உருவாக்கினால், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

கோதவாடி குளத்துக்கு பூரண் டாம்பாளையம் பகுதியிலிருந்து இயற்கையான நீர்வழிப்பாதை அமைந்துள்ளது.

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலம், பச்சார்பாளையம் பகுதியில் உள்ள பிஏபி பிரதான வாய்க்காலில் இருந்து, பூரண்டாம்பாளையம் வரை 5 கிலோமீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைத்து, 900 கனஅடி நீரை குளத்துக்கு கொண்டு வந்தால், 3 நாட்களில் குளம் நிரம்பிவிடும். இயற்கையான நீர்வழிப்பாதை என்பதால் நிலத்தைக் கையகப்படுத்தவும் தேவையில்லை. இந்த திட்டத்துக்கு குறைந்த நிதி போதுமானது. குறுகிய காலத்தில் திட்டத்தை நிறைவேற்றிவிடலாம்.

இந்த திட்டத்தால் 30 கிராம ஊராட்சிகளில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட கிணறு மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இதன் மூலம், கிணற்றுப் பாசன விவசாயமும் செழிக்கும். கோதவாடியைச் சுற்றியுள்ள 30 கிராமங்கள் பயனடையும். நாங்கள் பிஏபி அணையிலிருந்து நேரடியாக பாசனத்துக்கு தண்ணீர் கேட்கவில்லை. உபரி நீரை மட்டுமே கேட்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறும்போது, "பிஏபி திட்டம் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. பிஏபி வாய்க்காலில் குழாய் அமைத்து, தண்ணீர் கொண்டுவருவது குறித்து அவசரகதியில் முடிவெடுக்க முடியாது.

முதலில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கோதவாடி குளத்துக்கு நிச்சயம் தண்ணீர் கொண்டுவரப்படும். அதற்கான மாற்று நீராதா ரங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x