Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

காணும் பொங்கலின்போது மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்; 100% இருக்கைகளுடன் செயல்பட்டால் திரையங்குகளின் உரிமம் ரத்து: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை

அரசின் உத்தரவை மீறி, திரையரங்குகள் 100 சதவீதம் இருக்கைகளுடன் செயல்பட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். மேலும், ஆங்கில புத்தாண்டின்போது கொடுத்ததைப்போல காணும் பொங்கலின்போதும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியில் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் மகளிருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்கள் மூலமாக கிடைக்கப்பெறும் புகார்கள் மீதுஉடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாட பொது மக்கள் கடற்கரை, பொழுது போக்கு மையங்களுக்கு செல்ல வேண்டாம் எனதமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காணும் பொங்கலன்றுமக்கள் பொது இடங்களில் கூடக்கூடாது. ஆங்கில புத்தாண்டின்போது ஒத்துழைப்பு கொடுத்தது போல காணும் பொங்கலின்போதும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் உத்தரவின்படி 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட வேண்டும். அதை மீறி 100 சதவீதஇருக்கைகளுடன் செயல்பட்டால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன், இணை ஆணையர் ஆர்.சுதாகர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x