

தனது வீட்டருகே நிரம்பி வழிந்த பாதாளச் சாக்கடை மற்றும் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் வரை ராமநாதபுரம் அதிமுக எம்எல்ஏ மணிகண்டன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் பல நாட்களாக கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்கியுள்ளது..இதை அகற்றக் கோரி பொதுமக்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் அகற்றப்படவில்லை.
இப்பகுதியில்தான் முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டனின் வீடு உள்ளது. இதுகுறித்து எம்எல்ஏவிடமும் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து எம்எல்ஏ மணிகண்டன், நேற்று கழிவுநீர் தேங்கி நின்ற பகுதியில் உள்ள வீட்டின் முன் அமர்ந்து நகராட்சி அதிகாரிகளை மொபைல் போனில் உடனடியாக கழிவு நீரை அகற்றுமாறு தெரிவித்தார். அதிகாரிகள் பொங்கல் விடுமுறை யில் சென்றிருந்ததால் யாரும் வரவில்லை. அலுவலக ஊழியர் முனீஸ்வரன் மட்டும் வந்தார். அதன்பின் அவர் ஆட்கள், வாக னத்தை வரவழைத்து கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
பகல் 12 மணிக்கு தொடங்கிய தர்ணா 2 மணி வரை நீடித்தது. கழிவுநீரை அகற்றும் வரை சுமார் 2 மணி நேரம் மணிகண்டன் எம்எல்ஏ அங்கேயே அமர்ந்திருந்தார்.