Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM

சிவகங்கை அருகே பொங்கல் விழாவில் ஒரு கரும்பு ரூ.35,001, எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்: வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்த பெண்கள்

சிவகங்கை அருகே மதகுபட்டி சலுகைபுரத்தில் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்த பெண்கள்.

சிவகங்கை

சிவகங்கை அருகே பொங்கல் விழாவில் நடந்த ஏலத்தில் ஒரு கரும்பு ரூ.35,001-க்கும், எலுமிச்சை ரூ.15,100-க்கும் ஏலம் போனது.

சிவகங்கை அருகே மதகுபட்டி கிழக்குத்தெரு, மேற்குத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் அதிக அளவில் முத்தரையர் சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் காவல் தெய்வங்களாக பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபாடு செய்கின்றனர். நேற்று மாட்டு பொங்கலையொட்டி அம்மனுக்கு பெண்கள் அணிகலன்கள் அணியாமல் வெள்ளை சேலை உடுத்தி பொங்கல் வைத்தனர்.

அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டினர். விழா முடிந்ததும் மாலையில் கிழக்குத்தெருவில் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்பட்ட கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவற்றை ஏலம் விட்டனர். இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் அவற்றை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதில் ஒரு கரும்பு அதிகபட்சமாக ரூ.35,001, ஒரு எலுமிச்சை ரூ.15,100-க்கு ஏலம்போனது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் தெய்வங்களுக்கு முன்பு ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக உடையணிந்து பொங்கல் வைப்போம். இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே விரதம் இருக்க தொடங்கி விடுவோம். ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x