

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
மாவட்டம் முழுவதும் 3.60 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அறுவடைக்கு தயாராகவும், சூழ்கட்டும் பருவத்துக்கும் எட்டிய பயிர்கள் முழுமையாக மழைநீரில் மூழ்கி வீணாகி வருகின்றன.
ஏற்கெனவே புரெவி புயல் மற்றும் நிவர் புயல் காரணமாக நெற்பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றில் தப்பிப்பிழைத்த சம்பா பயிர்கள் தற்போது தொடர் மழையில் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், குடவாசல், நன்னிலம், மன்னார்குடி, மாவூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் தை முதல்வாரத்தில் அறுவடை செய்யும் வகையில் இருந்த 2 லட்சம் ஏக்கரிலான சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி வயலில் சாயந்து சேதமடைந்துள்ளன.
மழை முழுவதுமாக ஓய்ந்த பின்னரும் தண்ணீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால், அதற்குள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் எஞ்சிய பயிர்கள் அனைத்தும் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
எடமேலையூர், பேரையூர், வடுவூர், பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, காரிகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், நன்னிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மார்கழி பட்டத்துக்கு விதைக்கப்பட்ட கடலை செடிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதற்கிடையே நேற்று காலை முதல் சற்று ஓய்ந்திருந்த மழை, மாலையில் பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.