

சென்னை ஆர்.கே.நகரில் தொடங்கப் படவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இந்த ஆண்டு முதல் புதிய அரசு ஐடிஐ தொடங்கப்பட உள்ளது. புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக இந்த ஐடிஐ செயல்படும்.
2 ஆண்டு பயிற்சியான ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், கம்மியர், மோட்டார் வாகனம் ஆகிய பிரிவுகளுக்கு 14 முதல் 40 வயது வரை ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சிக் கட்டணம் இல்லை. மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும்.
இங்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவி களுக்கு அரசால் வழங்கப்படும் லேப்டாப் கணினி, சைக்கிள், புத்தகங்கள், வரை படக் கருவி, சீருடைகள், காலணி ஆகிய வை விலையில்லாமல் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், சென்னை நடுநிலைப் பள்ளி, இருசப்பன் வீதி, புதுவண்ணாரப்பேட்டை அல்லது துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், வட சென்னை ஆகிய முகவரிக்கு நவம்பர் 11-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.