Published : 16 Jan 2021 03:16 AM
Last Updated : 16 Jan 2021 03:16 AM

அணைக்கட்டு, பனமடங்கி, குடியாத்தம் பகுதிகளில் எருது விடும் திருவிழாக்களில் 50 பேர் படுகாயம்

காட்பாடி அடுத்த பனமடங்கி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் இலக்கை நோக்கி சீறிபாயும் காளை.

அணைக்கட்டு/குடியாத்தம்/காட்பாடி

அணைக்கட்டு, பனமடங்கி, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்ற எருது விடும் திருவிழாக்களில் 50-க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். அணைக்கட்டில் 2 காளைகள் மோதிக்கொண்டதில், ஒரு காளை பரிதாபமாக உயிரிழந்தது.

பொங்கல் பண்டிகையொட்டி வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று அணைக்கட்டு, பனமடங்கி, அத்தியூர், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காளை விடும் திருவிழா நடைபெற்றது. அணைக்கட்டில் நடைபெற்ற காளை விடும் திருவிழாவுக்கு துணை ஆட்சியர் பூங்கொடி தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்தார். வேலூர் கோட்டாட்சியர் கணேஷ் முன்னிலை வகித்தார்.

போட்டியில் கலந்து கொண்ட காளைகளை கால்நடை மருத்து வர்கள் பரிசோதனை செய்து தகுதிச்சான்றிதழ் வழங்கினர். இப்போட்டியில், அணைக்கட்டு, கோவிந்தரெட்டிப்பாளையம், அரியூர், ஊசூர், சித்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 170 காளைகள் கலந்து கொண்டு குறிப்பிட்ட தூரத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் கடந்து சென்றன.

சீறிப்பாய்ந்து ஒடிய காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். காளைகளை பிடிக்க முயன்றதில் 28 பேர் காயமடைந்தனர். மாடுகள் முட்டியதில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். அதில், ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த காளை ஒன்று சீறிப்பாய்ந்து ஓடியபோது முன்னால் நிதானமாக சென்ற காளை மீது மோதியது. இதில், அந்த காளை பரிதாபமாக உயிரிழந்தது. இப்போட்டியில், மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது. அதேபோல, 2-ம் இடம், 3-ம் இடம் வந்த காளைகள் உட்பட 55 காளை களுக்கு ரொக்கம், வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப் பட்டன. எருது விடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் பிற்பகல் 2 மணி வரை அனுமதியளித்திருந்த நிலையில், 2 மணியை கடந்து போட்டி நடைபெற்றது.

இதைக்கண்ட காவல் துறை யினர் போட்டியை நிறுத்துமாறு கூறியதால் விழாக் குழுவின ருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட காளைகளுக்கு விழாக் குழுவினர் ‘கரோனா எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், வர்தா புயல், மங்காத்தா, பில்லா, ரங்கா, மாயன், பொலேரோ என பல வகையான பெயர்களை சூட்டி காளைகளை ஓடவிட்டனர்.

அதேபோல, குடியாத்தம் வட்டம் வீரசெட்டிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குட்லவாரிபல்லி கிராமத் தில் காளை விடும் திருவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் பானு தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

வட்டாட்சியர் வத்சலா முன்னிலை வகித்தார். இதில், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், மாதனூர், வாணி யம்பாடி, காட்பாடி, கரசமங்கலம், லத்தேரி, சித்தூர், வி-கோட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில், மாடு பிடி வீரர்கள், பார்வை யாளர்கள் என மொத்தம் 25 பேர் மாடு முட்டியதில் காயமடைந்தனர்.

அதேபோல, காட்பாடி அடுத்த பனமடங்கி, அணைக்கட்டு அடுத்த அத்தியூர் போன்ற கிராமங்களிலும் எருது விடும் திருவிழா நேற்று நடைபெற்றது.

இதில், 100 காளைகள் கலந்து கொண்டு ஓடின. 10 பேர் காயமடைந்தனர். போட்டி நடைபெற்ற இடங்களில் வேலூர் கூடுதல் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x